23:27
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டிகளின் போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதையடுத்து பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் பணியில் அம்மாநில போலீசார் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து இந்தூர் சரக ஐ.ஜி. சஞ்சய்ராணா கூறும் போது, சில பயங்கரவாத கும்பல்கள் ஐ.பி.எல். போட்டியின் போது நாச வேலைகளில் ஈடுபடலாம் என்பதால் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து ஆலோசனை பெற்றுள்ளோம். போட்டியை அமைதியாக நடத்துவதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் என்றார்.
மேலும் 2 ஆயிரம் போலீசார் மைதான பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். வெடிகுண்டை செயலிழக்க செய்யும் படையினர் மோப்ப நாய் ஆகியவையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன. தடை செய்யப்பட்ட சிமி இயக்கம், இந்தியன் முஜாகிதீன் ஆகிய அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் குறித்தும் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதே போல் அந்த அமைப்புகளுடன் தொடர்புடைய இப்போது சிறையில் இருப்பவர்களையும் கண்காணித்து வருகின்றனர் என்றார்.
