
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் 8-ந்தேதி தொடங்கியது. இன்றுடன் “லீக்” ஆட்டங்கள் முடிகிறது.
சென்னை சூப்பர்கிங்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளேஆப் என்று அழைக்கப்படும் அரைஇறுதிக்கு முன்னேறி உள்ளன. இதனால் இன்றைய கடைசி “லீக்” ஆட்டம் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் எந்தந்த இடங்களை என்பதை முடிவு செய்யும்.
பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை அணி 9 வெற்றி, 4 தோல்வியுடன் 18 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.
பெங்களூர் அணி 8 வெற்றி, 4 தோல்வியுடன் (ஒரு ஆட்டம் முடிவு இல்லை) 17 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. இதனால் வெற்றி பெறும் அணி முதலிடத்தை பிடிக்கும். இதனால் இரு அணிகளும் வெற்றிக்காக போராடும்.
சென்னை வெற்றி பெற்றால் பிளே ஆப் தகுதி சுற்றில் மும்பை அல்லது கொல்கத்தாவுடன் மோதும். பெங்களூர் அணி வெற்றி பெற்றால் பெங்களூர் - சென்னை அணிகள் மோத வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் சென்னை அணி ரன் ரேட்டில் நல்ல நிலையில் இருப்பதால் தோற்றால் 2-வது இடத்தில் இருக்கும்.
சென்னை அணி ஏற்கனவே பெங்களூரை வீழ்த்தி இருந்தது. கிறிஸ்கெய்லின் வருகைக்கு பிறகு பெங்களூர் அணி பலம் பெற்று காணப்படுகிறது. அந்த அணி தொடர்ந்து 7 ஆட்டத்தில் வெற்றி பெற்றது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அந்த அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்து கிறிஸ்கெய்ல் 1 ரன்னில் “அவுட்” ஆனார். இதேபோல சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் கெய்லை கட்டுப்படுத்தும் விதமாக சிறப்பாக விளையாடும்.
சென்னை சூப்பர்கிங்ஸ் அனைத்து துறையிலும் சிறப்பாக உள்ளது. உள்ளூரில் விளையாடுவது பெங்களூர் அணிக்கு கூடுதல் வாய்ப்பு. இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரவு 8 மணிக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 70வது கடைசி “லீக்” ஆட்டத்தில் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - தெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் 8 வெற்றி, 5 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ளன.
ரன்ரேட்டில் முன்னிலை பெற்றுள்ளதால் கொல்கத்தா 3-வது இடத்திலும் (+0.47), மும்பை 4-வது இடத்திலும் (+0.03) உள்ளன. சென்னை - பெங்களூர் அணிகள் ஆட்டத்துக்கு பிறகு இந்தப் போட்டி நடைபெறுவதால் அந்த முடிவுக்கு ஏற்றவாறு விளையாடும்.
சென்னை அணி வெற்றி பெற்றால் இரு அணிகளும் 2-வது இடத்தை பிடிப்பதற்காக கடுமையாக போராடும். இந்தப் போட்டித் தொடரில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய மும்பை இந்தியன்ஸ் கடைசி நேரத்தில் பின்னுக்கு தள்ளப்பட்டது.
நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி தோற்றதால் அந்த அணி நிம்மதி அடைந்தது. தொடர்ந்து 3 ஆட்டத்தில் தோற்றதால் அந்த அணி அதற்கு முடிவு கட்டும் வகையில் விளையாடும். கொல்கத்தாவும் நல்ல நிலையில் இருப்பதால் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்று தெரிகிறது.