00:16
-தர்மசாலாவில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் லீக் ஆட்டத்தில் டெக்கான் 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வெற்றி கொண்டது. இந்த ஆட்டத்தில் தோற்றதன் மூலம் பஞ்சாப் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதனால் மும்பை,கொல்கத்தா அணிகள் அடுத்த சுற்றுக்கு எளிதாக முன்னேறிவிட்டன.டெக்கான் அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவாண் 57 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 1 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 95 ஓட்டங்களை பெற்றார். அந்த அணியின் அமித் மிஸ்ரா ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் அமித் மிஸ்ரா ஐபிஎல்லில் இரண்டாவது முறையாக ஹெட்ரிக் சாதனை படைத்துள்ளார். 2 முறை ஹெட்ரிக் விக்கெட் சாதனை படைத்த மற்றொரு வீரர் யுவராஜ் சிங் ஆவார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய டெக்கான் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 198 ஓட்டங்களை பெற்றது. பின்னர் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 19 ஓவர்களில் 116 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணித் தலைவர் கில்கிறிஸ்ட் களத்தடுப்பை தேர்வு செய்தார். இதையடுத்து டெக்கான் அணியில் தவாணும், ரவிதேஜாவும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கி வேகமான ஓட்ட எண்ணிக்கை குவிப்பில் ஈடுபட்டனர்.
தவாண் 35 பந்துகளிலும், ரவி தேஜா 37 பந்துகளிலும் அரைசதமடித்தனர். பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் இவர்களை வீழ்த்த எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. டெக்கான் 131 ஓட்டங்களை எட்டியபோது ரவிதேஜா 60 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவர் 41 பந்துகளில் 60 ஓட்டங்களை எடுத்தார். இறுதியில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 198 ஓட்டங்களை பெற்றது. தவாண் 95 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் வல்தாட்டி 5, மார்ஷ் 13 ரன்களிலும் வெளியேறினர். இருப்பினும் கில்கிறிஸ்ட் அதிரடியாக ஆடி அரைசதமடித்தார். அவர் 51 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். 37 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் அவர் இந்த ஓட்டத்தை எடுத்தார்.
பின்னர் வந்த கார்த்திக் 11 ஓட்டங்களில் வெளியேறினார். 16ஆவது ஓவரை வீசிய அமித் மிஸ்ரா அந்த ஓவரின் 3ஆவது பந்தில், மெக்லாரன் (9), 4ஆவது பந்தில் மன்தீப் சிங் (7), 5ஆவது பந்தில் ஹரிஸ் (0) ஆகியோரை வெளியேற்றி ஹெட்ரிக் சாதனை படைத்தார்.
இதனால் பஞ்சாப் அணி 19 ஓவர்களில் 116 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் டெக்கான் 82 ஓட்டங்களில் வெற்றிபெற்றது. தவாண் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
