

ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரில் கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கும், கடைசி லீக் போட்டியில் சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, காம்பிரின் கோல்கட்டா அணியை எதிர்கொள்கிறது.
கட்டாய வெற்றி:
தொடர்ந்து வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த மும்பை அணி, சமீபத்தில் "ஹாட்ரிக்' தோல்வியால் துவண்டு கிடக்கிறது. பஞ்சாப் அணியின் தோல்வி காரணமாக, அடுத்த சுற்று வாய்ப்பு உறுதியாகிவிட்ட நிலையில், இன்று வெற்றிப் பாதைக்கு திரும்பினால் நல்லது.
ஆனால், சச்சின் உள்ளிட்ட "டாப்-ஆர்டர்' வீரர்கள், தொடர்ந்து சொதப்பி வருவது அணியின் வெற்றியை பாதிக்கிறது. அம்பதி ராயுடு, சுமன் உள்ளிட்டோர் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட வேண்டும். கடந்த போட்டியில் அரை சதம் விளாசிய ரோகித் சர்மா இன்றும் அசத்தலாம். போலார்டு இன்றாவது ஆறுதல் தருவாரா என்று பார்க்கலாம்.
மலிங்கா நம்பிக்கை:
பவுலிங்கில் மலிங்காவின் வேகம் கடந்த போட்டியில் எடுபடவில்லை. இன்று ஏதேனும் மாற்றம் செய்தால் அசத்தலாம். இவருடன் போலார்டு, குல்கர்னி உள்ளிட்டோரும் கைகொடுக்க வேண்டும். ஹர்பஜன் சுழல் தொடர்ந்து ஏமாற்றி வருவது அணிக்கு பெரும் பலவீனம் தான்.
கோல்கட்டா நம்பிக்கை:
கோல்கட்டா அணியை பொறுத்தவரையில், தற்போது மூன்றாவது இடத்தில் <உள்ளது. இன்று சிறப்பான வெற்றி பெறும் பட்சத்தில் முதல் இரு இடங்களுக்கும் முன்னேறலாம். இது பைனல் வாய்ப்பை அதிகரிக்கும் என்பதால், அனுபவ வீரர்கள் காம்பிர், காலிஸ், கோஸ்வாமி, திவாரி ஆகியோர் அணிக்கு சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுக்க வேண்டும். "ஆல் ரவுண்டர்' யூசுப் பதானும் எதிரணிக்கு தொல்லை தருவார் என்று நம்பலாம்.
பிரட் லீ எதிர்பார்ப்பு:
ஐ.பி.எல்., தொடரில் 13போட்டிகளில் பங்கேற்று, 4 விக்கெட்டுகளை மட்டும் வீழ்த்தியுள்ள பிரட் லீ, இன்று ஓரளவு அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, இக்பால் அப்துல்லா, பாலாஜி, ஷாகிப் அல் ஹசன் இணைந்து அணிக்கு வெற்றியை கொண்டு வர முயற்சிப்பார்கள் என தெரிகிறது.