22:21
இங்கிலாந்துக்கு எதிரான "டுவென்டி-20' போட்டியில் இந்திய பெண்கள் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
பெண்களுக்கான நான்கு நாடுகள் பங்கேற்கும் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக தோல்வி கண்ட இந்திய அணி, நேற்று கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்தை எதிர் கொண்டது."டாஸ்' வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு கிளையர் டெய்லர் (66), டேனிலி வியாட் (23) கைகொடுத்தனர். இங்கிலாந்து அணி 19.5 ஓவரில் 134 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது. இந்தியா சார்பில் கோஸ்வாமி, ஸ்னேகல் பிரதன் தலா 3, அமிதா சர்மா 2 விக்கெட் வீழ்த்தினர்.எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு நேகா தன்வர், மிதாலி ராஜ், பிரியங்கா ராய் உள்ளிட்டோர் தலா 17 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தனர். மற்ற வீராங்கனைகள் ஏமாற்ற இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 88 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்த இந்திய அணி, 3-4வது இடத்துக்கான போட்டியில் இன்று நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. பைனலில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

