22:23
இலங்கை அணிக்காக, ஜெயசூர்யா இன்னும் நிறைய போட்டிகளில் பங்கேற்க வேண்டும்,'' என, இளம் வீரர் திலினா கண்டம்பி விருப்பம் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, ஒரே ஒரு "டுவென்டி-20' போட்டியில் விளையாடியது. இதில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நீண்ட நாட்களுக்கு பின் அனுபவ வீரர் ஜெயசூர்யா, இப்போட்டியில் விளையாடினார்.
இதுகுறித்து இலங்கை வீரர் திலினா கண்டம்பி கூறியதாவது: கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் ஜெயசூர்யா, நிறைய அனுபவம் பெற்றுள்ளார். எனவே இவர் இலங்கை அணிக்காக இன்னும் நிறைய போட்டிகளில் விளையாடினால் நன்றாக இருக்கும். ஆனால் ஓய்வு என்பது ஒவ்வொரு வீரரின் தனிப்பட்ட முடிவு. இதில் யாரும் தலையிட முடியாது.
தில்ஷன் இல்லாத நிலையில் அணியை வழிநடத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போட்டியில் எங்கள் அணியின் பேட்டிங், பவுலிங், பீல்டிங் சிறப்பாக இருந்ததால், சுலப வெற்றி பெற முடிந்தது. வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா, அணியில் இருக்கும் பட்சத்தில் எந்த ஒரு அணியையும் எளிதில் சமாளித்து விடலாம். ஏனெனில் உலகின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் இவரும் ஒருவர். இதேபோல அனுபவ வீரர்களான மகிளா ஜெயவர்தனா, சங்ககரா உள்ளிட்டோர் போட்டியில் சிறப்பாக ஒத்துழைப்பு அளித்தனர். சில நேரங்களில் ஆலோசனைகள் வழங்கி ஊக்கப்படுத்தினர்.
இவ்வாறு கண்டம்பி கூறினார்.
