22:39
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 246 ரன் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 173 ரன்னில் சுருண்டது. அட்ரியன் பரத் அதிகபட்சமாக 64 ரன் எடுத்தார். இந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா, பிரவீண்குமார் தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.73 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 91 ரன் எடுத்து இருந்தது. டிராவிட் 45 ரன்னிலும், கோலி 14 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து விளையாடினார்கள். வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டாரன்சேமி, சுழற்பந்து வீரர் பிஷீ ஆகியோரின் அபாரமான பந்து வீச்சினால் இந்திய விக்கெட்டுகள் சரிந்தன. கோலி (15 ரன்), ரெய்னா (27), டோனி (16), ஹர்பஜன்சிங் (5), பிரவண்குமார் (6) ஆகியோர் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினார்கள்.
183 ரன்னில் இந்திய 8 விக்கெட்டை இழந்தது. ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் ராகுல்டிராவிட் மிகவும் பொறுப்பாக விளையாடி இந்திய அணியை காப்பாற்றினார். அவரது பேட்டிங் மிகுந்த நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. அவர் 9-வது விக்கெட்டான மிஸ்ராவை வைத்துக் கொண்டு சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 252 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 100 ரன்னை தொட்டார்.
151-வது டெஸ்டில் விளையாடும் டிராவிட்டுக்கு இது 32-வது சதம் ஆகும். ஸ்கோர் 239 ஆக இருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. மிஸ்ரா 28 ரன்னில் ஆட்டம் இழந்தார். மிகவும் அபாரமாக ஆடிய டிராவிட் கடைசி விக்கெட்டாக ஆட்டம் இழந்தார். அவர் 274 பந்தில் 112 ரன் (10 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார்.
இந்திய அணி 94.5 ஓவரில் 252 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் முதல் இன்னிங்சில் பெற்ற கூடுதல் ரன் மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு 326 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சேமி, பிஷீ தலா 4 விக்கெட் கைப்பற்றினர்.
326 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை விளையாடியது. தொடக்க வீரர்களான அட்ரியன், சிம்மன்ஸ் பொறுப்புடன் விளையாடினர்கள். இந்த ஜோடியை பிரவீண்குமார் பிரித்தார். பரத் 38 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த முன்னணி வீரரான சர்வான் ரன் எதுவும் எடுக்காமல் இஷாந்த் சர்மா பந்தில் அவுட் ஆனார்.
இதேபோல மற்றொரு தொடக்க வீரரான சிம்மன்ஸ் விக்கெட்டையும் இஷாந்த் சர்மா கைப்பற்றினார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் வெஸ்ட்இண்டீஸ் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன் எடுத்து இருந்தது. பிராவோ 30 ரன்னிலும், சந்தர்பால் 24 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இந்தியாவுக்கு வெற்றி கிடைக்குமா? இந்திய அணி வெற்றி பெற 195 ரன்னுக்குள் வெஸ்ட் இண்டீஸ் அணியின் எஞ்சிய 7 விக்கெட்டை கைப்பற்ற வேண்டும். வெஸ்ட்இண்டீஸ் அணியும் இந்த ரன்னை எடுக்க போராடும். இதனால் இன்றைய 4-வது நாள் ஆட்டம் பரபரப்பான நிலையில் இருக்கும். இந்திய பவுலர்கள் முதல் இன்னிங்சை போலவே 2-வது இன்னிங்சிலும் பந்து வீசினால் வெற்றியை பெறலாம்.
