22:29
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 201 ரன்னில் சுருண்டது. லட்சுமண் 85 ரன்னும், ரெய்னா 53 ரன்னும் எடுத்தனர். எட்வர்ட்ஸ், ராம்பால், பிஷு தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள். பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 30 ரன் எடுத்து இருந்தது. சர்வான் 10 ரன்னும், பிஷு ரன் எதுவும் எடுக்காமலும் ஆடிக் கொண்டிருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து ஆடினார்கள். இஷாந்த் சர்மாவின் அபாரமான பந்து வீச்சினால் வெஸ்ட் இண்டீஸ் தொடக்கத்தில் தடுமாறியது. 53 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 5 விக்கெட்டை இழந்தது. தேவேந்திர பிஷு (13), சர்வான் (18) ஆகியோரது விக்கெட்டை இஷாந்த் சர்மா கைப்பற்றினார்.
6-வது விக்கெட்டான சந்தர்பால்- சாமுவேல்ஸ் ஜோடி விக்கெட் சரிவை தடுத்து பொறுப்புடன் ஆடி யது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் இழப்புக்கு 82 ரன் எடுத்து இருந்தபோது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
மழை விட்டதும் போட்டி தொடங்கியது. பின்னர் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் இழப்புக்கு 98 ரன் எடுத்திருந்தபோது மீண்டும் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை அதிகமாக இருந்ததால் போட்டியை தொடர்ந்து நடத்த இயலாத நிலை ஏற்பட்டது. மழையால் 2-வது நாள் ஆட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. மழையால் நேற்றைய ஆட்டம் 25.3 ஓவர்களே நடந்தது.
