22:24
பெண்கள் உலக கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டியில், அமெரிக்க அணி 2-0 என்ற கோல் கணக்கில் வட கொரியாவை வீழ்த்தியது.
ஜெர்மனியில் பெண்களுக்கான 6வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில், பிரேசில், ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட உலகின் 16 முன்னணி அணிகள் பங்கேற்கின்றன.நேற்று முன்தினம் "சி' பிரிவில் நடந்த லீக் போட்டியில் அமெரிக்கா-வட கொரியா அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டியின் முதல் பாதி முடிவில் இரு அணி வீராங்கனைகளால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.பின், இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட அமெரிக்க அணிக்கு லவுரன் செனி (54வது நிமிடம்), ராசல் புக்லர் (76வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். இதற்கு வட கொரிய வீராங்கனைகளால் பதிலடி கொடுக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் அமெரிக்கா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.சுவீடன் வெற்றி:"சி' பிரிவில் நடந்த மற்றொரு லீக் போட்டியில் சுவீடன், கொலம்பியா அணிகள் மோதின. இதில் ஜெசிகா லாண்ட்ஸ்டிரோம் (57வது நிமிடம்) ஒரு கோல் அடித்து கைகொடுக்க, சுவீடன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.பிரான்ஸ்-கனடா மோதல்:இன்று நடக்கவுள்ள "ஏ' பிரிவு லீக் போட்டியில் கனடா, பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் நைஜீரியாவை வீழ்த்திய பிரான்ஸ் அணி, இரண்டாவது வெற்றிக்கு போராடும். அதேவேளையில் ஜெர்மனிக்கு எதிராக தோல்வி கண்ட கனடா அணி, முதல் வெற்றியை பதிவு செய்ய முயற்சிக்கும் என்பதால் விறுவிறுப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.

