23:01
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு ரஷ்யாவின் மரியா ஷரபோவா முன்னேறினார்.
லண்டனில், 125வது விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா, சுலோவேகியாவின் டோமினிகா சிபுல்கோவாவை சந்தித்தார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷரபோவா 6-1, 6-1 என்ற நேர் செட்டில் மிகச் சுலபமாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் ஜெர்மனியின் சபினி லிசிக்கி, பிரான்ஸ் வீராங்கனை மரியன் பர்டோலியை சந்தித்தார். இதில் லிசிக்கி 6-4, 6-7, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அரையிறுதியில் லிசிக்கி, ரஷ்யாவின் ஷரபோவாவை சந்திக்க உள்ளார்.
நடால் வெற்றி:
ஆண்கள் ஒற்றையர் நான்காவது சுற்றில் உலகின் "நம்பர்-1 வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால், அர்ஜென்டினாவின் ஜூயன் மார்டின் டெல் போட்ரோவை சந்தித்தார். இதில், "டை-பிரேக்கர் வரை நீடித்த முதல் செட்டை 7-6 என கைப்பற்றிய நடால், இரண்டாவது செட்டை 3-6 என கோட்டைவிட்டார். பின் எழுச்சி கண்ட நடால், அடுத்த இரண்டு செட்டை 7-6, 6-4 என தன்வசப்படுத்தினார். இறுதியில் நடால் 7-6, 3-6, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
பெடரர் அபாரம்:
மற்றொரு போட்டியில் "நடப்பு சாம்பியன் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ரஷ்யாவின் மிக்கைல் யோஸ்னியை சந்தித்தார். "டை-பிரேக்கர் வரை நீடித்த முதல் செட்டை 6-7 என இழந்த பெடரர், அடுத்த மூன்று செட்டை 6-3, 6-3, 6-3 என கைப்பற்றினார். இறுதியில் பெடரர் 6-7, 6-3, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
பயஸ்-பூபதி அபாரம்:
கலப்பு இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் மகேஷ் பூபதி, ரஷ்யாவின் எலினா வெஸ்னினா ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீபன் ஹஸ், அனஸ்டாசியா ரோடியோனோவா ஜோடியை சந்தித்தது. இதில் பூபதி-வெஸ்னினா ஜோடி 6-2, 7-6 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் பயஸ், ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி, நெதர்லாந்தின் ரோஜியர் வாசென், போலந்தின் அலிக்ஜா ரோசால்ஸ்கா ஜோடியை சந்தித்தது. இதில் பயஸ்-பிளாக் ஜோடி 6-1, 6-4 என்ற நேர் செட்டில் மிகச் சுலபமாக வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தது.
