01:21
வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் உள்ள போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று நடந்தது. இந்திய அணி கேப்டன் ரெய்னா “டாஸ்” வென்று வெஸ்ட்இண்டீசை முதலில் விளையாட அழைத்தார்.இந்திய வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சால் வெஸ்ட்இண்டீஸ் திணறியது. 197 ரன்னில் அந்த அணி 7 விக்கெட்டை இழந்தது. கடைசி நேர ஆட்டக்காரர்களால் அந்த அணி கவுரவமான ரன்னை எடுத்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 240 ரன் எடுத்தனர்.
சுழற்பந்து வீரர் அமித் மிஸ்ரா 31 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். முனாப்பட்டேல் 3 விக்கெட்டும், யூசுப்பதான் 2 விக்கெட்டும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் சர்வான் 56 ரன்னும், தொடக்க வீரர் லெண்டில் சிம்மன்ஸ் 53 ரன்னும், சாமு வேல்ஸ் 36 ரன்னும் எடுத்தனர்.
241 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. பார்த்தீவ் பட்டேல், தவான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய தவான் இந்த போட்டியில் ஏமாற்றம் அளித்தார். அவர் 3 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
2-வது விக்கெட்டுக்கு பார்த்தீவ் பட்டேலுடன் வீராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் விளையாடியது. வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை சிதறடித்தனர். 22-வது ஓவரில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 100 ரன் எடுத்து இருந்தபோது ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. மழையால் ஆட்டம் சுமார் 85 நிமிட நேரம் பாதிக்கப்பட்டது.
மழை காரணமாக இந்திய அணியின் இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. 37 ஓவரில் 183 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனால் 90 பந்தில் 83 ரன் தேவை என்ற நிலையில் வீராட் கோலியும், பார்த்தீவ் பட்டேலும் தொடர்ந்து விளையாடினார்கள். கோலி அபாரமாக விளையாடி முதலில் அரை சதத்தை தொட்டார். அவரை தொடர்ந்து பார்த்தீவ் பட்டேலும் 50 ரன்னை தொட்டார்.
நன்றாக விளையாடிக் கொண்டிருந்த பார்த்தீவ் பட்டேல் 56 ரன்னில் ஆட்டம் இழந்தார். 64 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் இந்த ரன்னை தொட்டார். 2-வது விக்கெட் ஜோடி 120 ரன் எடுத்தது. அடுத்து கேப்டன் ரெய்னா களம் வந்தார். மறுமுனையில் இருந்த கோலி தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். வெற்றிக்கு 10 ரன் தேவை இருந்தபோது அவர் ஆட்டம் இழந்தார்.
கோலி 103 பந்தில் 81 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும்.
4-வது விக்கெட்டுக்கு ரெய்னாவுடன், ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். 33.4-வது ஓவரில் இந்தியா வெற்றிக்கு தேவையான இலக்கான 183 ரன்னை எடுத்தது. 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரெய்னா 26 ரன்னிலும், ரோகித்சர்மா 7 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ராம்பால், மார்ட்டின், பிஷ தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.
வீராட் கோலி ஆட்ட நாயகனாக தேர்வு பெற்றார். இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. முதல் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதேபோல 20 ஓவர் போட்டியிலும் இந்தியா ஏற்கனவே வெற்றி (16 ரன்) பெற்று இருந்தது.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி வருகிற 11-ந்தேதி (சனிக் கிழமை) நடக்கிறது. இதில் வென்றால் இந்தியா தொடரை கைப்பற்றும்.
