22:01
இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட், சவுத்தம்டன் நகரில் இன்று துவங்குகிறது. சொந்த மண்ணில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வெல்ல இங்கிலாந்து அணி காத்திருக்கிறது.இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது டெஸ்ட் சவுத்தம்டன் நகரில் இன்று ஆரம்பமாகிறது.
ஆண்டர்சன் வருகை:
முதல் டெஸ்டில் காயமடைந்த இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் பங்கேற்கவில்லை. தற்போது காயம் குணமடைந்த நிலையில், மூன்றாவது டெஸ்டில் ஆண்டர்சன் களமிறங்குகிறார். இவரது வருகையால் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சு வலுவடைந்துள்ளது. "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் நல்ல "பார்மில்' இருப்பதால், இங்கிலாந்து அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.
"டாப்-2' வாய்ப்பு:
ஐ.சி.சி., டெஸ்ட் அணிகளுக்கான ரேங்கிங் பட்டியலில் இங்கிலாந்து அணி 115 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றும் பட்சத்தில், தென் ஆப்ரிக்க (117 புள்ளி) அணியுடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொள்ளலாம். முதலிடத்தில் 128 புள்ளிகளுடன் இந்தியா உள்ளது.
தில்ஷன் இல்லை:
லார்ட்ஸ் டெஸ்டின் போது இலங்கை கேப்டன் தில்ஷனின் கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் இவர், மூன்றாவது டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்கு பதிலாக முன்னாள் கேப்டன் சங்ககரா, கேப்டனாக செயல்பாடுவார். தில்ஷனுக்கு பதிலாக அறிமுக வீரரான லஹிரு திரிமனே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், சமீபத்தில் எசக்ஸ் அணிக்கு எதிராக நடந்த பயிற்சி போட்டியில் சதம் கடந்தார்.
கட்டாய வெற்றி:
இலங்கை அணிக்கு இப்போட்டி மிகவும் முக்கியமான ஒன்று. ஏனெனில் முதல் போட்டியில் தோல்வி கண்ட இலங்கை அணி, இரண்டாவது போட்டியை "டிரா' செய்தது. இன்று துவங்கவுள்ள மூன்றாவது டெஸ்டில் வெற்றி கண்டால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற இக்கட்டான நிலையில் இலங்கை அணி களமிறங்குகிறது. இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்ற குறைந்த பட்சம், "டிரா' செய்தாலே போதுமானது. ஆனால் ரேங்கிங்கில் முன்னேற வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இரு அணிகளும் கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்குவதால், விறுவிறுப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.
