19:01

வெஸ்ட் இண்டீஸ் அணியின் "வேகப்புயல்கள்" எதிரணி துடுப்பாட்டக்காரர்களை அச்சுறுத்த தவறுகின்றனர்.
ஆடுகளங்களும் படுமந்தமாக உள்ளன. தவிர வீரர்களிடம் போதிய அனுபவம் இல்லாததே அணியின் வீழ்ச்சிக்கு காரணம் என கர்ட்லி அம்புரோஸ் தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் கிரிக்கட் அரங்கில் கொடி கட்டிப் பறந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இப்போது உபயோகமில்லாத அணியாக திகழ்கிறது. ரெய்னா தலைமையிலான இளம் இந்திய அணியிடம் ஒருநாள் தொடரை இழந்துள்ளது. உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் இல்லாமல் தவிக்கிறது.
இதுகுறித்து அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அம்புரோஸ் வேதனையுடன் கூறியது, வெஸ்ட் இண்டீஸ் அணி இக்கட்டான நிலையில் உள்ளது. எதிரணி துடுப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவது தான் வேகப்பந்துவீச்சாளர்களின் முக்கிய பணி. இதே பாணியை தான் நான் அந்தக் காலத்தில் பின்பற்றினேன். தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் "வேகங்கள்" எதிரணி வீரரை பயமுறுத்தும் கலையை மறந்து விட்டனர். இதை தவிர, அணியின் வீழ்ச்சிக்கு முக்கியமான இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, மந்தமான ஆடுகளங்கள். முன்பு போல் பந்துகள் எகிறும் வகையில் ஆடுகளம் அமைக்கப்படுவது இல்லை. இரண்டாவதாக, வீரர்களிடம் போதிய அனுபவம் இல்லை.
நான் அணியில் சேர்ந்த போது மால்கம் மார்ஷல், கோர்ட்னி வால்ஷ் போன்ற ஜாம்பவான்கள் இருந்தனர். இவர்களிடம் இருந்து நிறைய விடயங்களை கற்றுக் கொண்டேன். தற்போதைய வீரர்களுக்கு அறிவுரை சொல்ல யாருமில்லை. சர்வதேச கிரிக்கட்டில் தங்களுக்கு தெரிந்த சின்னச் சின்ன விடயங்களை மட்டும் பகிர்ந்து கொள்கின்றனர். தற்போது அணியின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. இழந்த பெருமையை விரைவில் மீட்பது கடினம். ஒரு சில போட்டிகளில் வென்றால் மட்டுமே, மீண்டும் புத்துயிர் பெற முடியும்.
இந்திய வீரர் சச்சின் மீது அதிக பாசம் உண்டு. கடந்த 1990 ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அவரை முதன் முதலில் பார்த்தேன். பள்ளி மாணவர் போல இருந்தார். 17 வயதில் சதம் அடித்து தனது திறமை நிரூபித்தார். 1992 ல் நடந்த உலகக் கோப்பை தொடரில் சச்சின் மிகவும் இளம் வீரராக இருந்தார். நான் மூத்த வீரர் என்பதால், அவரது விக்கெட்டை எளிதில் கைப்பற்றினேன்.
என்னை பொறுத்தவரை அவுஸ்திரேலியாவின் டேவிட் பூனுக்கு பந்துவீசுவது தான் கடினமாக இருந்தது. மற்றொரு அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் வாக் மீது அதிக மரியாதை உண்டு. கடந்த 1995 ல் நடந்த டெஸ்ட் தொடரில், நாங்கள் பின் தங்கியிருந்தோம். இதனால் தான் ஸ்டீவ் வாக்கின் உடலை பதம் பார்க்கும் வகையில் பந்துவீசினேன். இதனால் வாக் ஆத்திரமடைய, அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. எங்களது மோதல் களத்தில் மட்டுமே நடந்தது. அதற்கு வெளியே சகஜமாக பழகினோம் என்று அம்புரோஸ் தெரிவித்தார்....
