22:14
"வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதிப்பேன்,'' என, இளம் இந்திய வேகப்பந்துவீச்சாளர் அபிமன்யு மிதுன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 20ம் தேதி ஜமைக்காவில் துவங்குகிறது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் இடம் பெற்றிருந்த ஜாகிர் கான், ஸ்ரீசாந்த் உள்ளிட்ட அனுபவ வேகப்பந்துவீச்சாளர்கள், காயம் காரணமாக சமீபத்தில் நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக பிரவீண் குமார், அபிமன்யு மிதுன் உள்ளிட்ட இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் வாய்ப்பு பெற்றனர்.இதுகுறித்து அபிமன்யு மிதுன் கூறியவாது: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஆண்டு முதன்முதலில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்கினேன். இதில் ஆறு விக்கெட் மட்டுமே கைப்பற்றிய நான், பெரிய அளவில் சாதிக்கவில்லை. இதனால் அடுத்து நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை. இது மிகவும் வேதனை அளித்தது. இதனால் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்ற நம்பிக்கை இன்றி மிகவும் சோர்வாக இருந்தேன். இச்சமயத்தில் நண்பர்கள், உறவினர்கள், சக வீரர்கள் என்னை உற்சாகப்படுத்தினர். இதன்மூலம் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எழுச்சி பெற முடிந்தது. இதற்கு தற்போது நல்ல பலன் கிடைத்தது. நீண்ட நாட்களுக்கு பின் கிடைத்த இந்த பொன்னான வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டு சாதிக்க முயற்சிப்பேன்.இவ்வாறு அபிமன்யு மிதுன் கூறினார்.
