22:18
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஐந்தாவது ஒருநாள் போட்டிக்கான ஆடுகளம், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளது. இது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பயன் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, "டுவென்டி-20' மற்றும் ஒருநாள் தொடருக்கான கோப்பைகளை கைப்பற்றி அசத்தியது. தவிர, சமீபத்தில் அங்கு சென்ற பாகிஸ்தான் அணியும் ஒருநாள் தொடரை வென்றது. இந்த தோல்விகளுக்கு ஆடுகளத்தை குறை சொல்கிறார் கேப்டன் சமி. இதுகுறித்து சமி கூறியது: இது சொந்த மண்ணில் நடக்கும் போட்டி. ஆனால் ஆடுகளம் எதிரணயினருக்கு சாதகமாக உள்ளது. இதேபோன்ற அனுபவம் தான் கடந்த பாகிஸ்தான் தொடரிலும் ஏற்பட்டது. நாங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் வேண்டும் என்று கேட்டிருந்தோம். அதுகுறித்து முடிவு செய்ய வேண்டியது ஆடுகள பராமரிப்பார்கள் தான். மற்றபடி இது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. இதுகுறித்து எங்கள் பயிற்சியாளர் ஓடிஸ் கிப்சன், சம்பந்தபட்டவர்களுக்கு கடிதம் எழுதியும், எந்த பலனும் இல்லை. நாங்கள் கூறியபடி ஆடுகளம் தயாரிக்கவில்லை. தற்போது இந்திய அணிக்கு எதிரான தொடரில், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகத்தான் ஆடுகளம் உள்ளது. இந்திய அணியில் உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால், ஆட்டம் அவர்கள் பக்கம் சென்று விட்டது.இவ்வாறு சமி கூறினார்.ஆடுகள மாற்றம்:இதேபோல, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் குற்றச் சாட்டியிருந்தனர். இதையடுத்து ஐந்தாவது ஒருநாள் போட்டி நடக்கும் ஜமைக்கா ஆடுகளத்தில் பந்துகள் எகிறும் வகையில், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இரு அணிகளும் இங்கு பேட்டிங்கில் திணறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து 1962 முதல் ஆடுகளத் தயாரிப்பாளராக உள்ள சார்லஸ் ஜோசப் கூறுகையில்,"" உண்மையான ஆடுகளம் என்பது பேட்ஸ்மேன், பவுலர்கள் என இருவருக்கும் சாதகமாக இருக்க வேண்டும். இதற்கு தகுந்து சிறப்பான ஆடுகளத்தை தர, எப்போதும் கடினமாக முயற்சிக்கிறோம். ஆனால் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இருப்பினும், பந்துகள் அதிகம் "பவுன்ஸ்' ஆகும் என்று நம்புகிறோம்,'' என்றார்.பயன் கிடைக்குமா?வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சாதகமாக ஆடுகளம் அமைக்கப்பட்டாலும், எதிரணி வீரர்களுக்கு அச்சம் தரும் வகையில், வேகப்பந்து வீச்சாளர்கள் யாரும் அந்த அணியில் இல்லை. இதனால் ஆடுகள மாற்றம் பயன்தருமா என்று, ஐந்தாவது போட்டியின் முடிவில் தான் தெரியும்.

