22:03
"அம்பயர் தீர்ப்பு மறுபரிசீலனை முறை (டி.ஆர்.எஸ்.,) எதிர்வரும் இங்கிலாந்து தொடரிலும் பயன்படுத்தப்பட மாட்டாது,' என, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அறிவித்துள்ளது.
டி.ஆர்.எஸ்., முறைக்கு துவக்கத்தில் இருந்தே பி.சி.சி.ஐ., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் இந்த முறை பயன்படுத்தப் படவில்லை. இதனிடையே நான்கு டெஸ்ட், ஒரு "டுவென்டி-20' மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க, (வரும் ஜூலை 21 முதல் செப்., 16 வரை) இந்திய அணி வரும் இங்கிலாந்து செல்கிறது. இதுகுறித்து "தி டெய்லி டெலிகிராப்' பத்திரிகையில் வெளியான செய்தியில்," ஒரு கிரிக்கெட் தொடரின் போது, இரு நாடுகளும் சம்மதித்தால் தான், டி.ஆர்.எஸ்., முறை பயன்படுத்தப்படும் என, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) விதி கூறுகிறது. இந்நிலையில் வரும் ஜூலையில் நடக்கும் தொடரில், இந்த முறை வேண்டாம் என, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டுக்கு, பி.சி.சி.ஐ., கடிதம் அனுப்பியுள்ளது,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.பி.சி.சி.ஐ., முடிவு குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஜான் எம்புரே கூறியது:டி.ஆர்.எஸ்., முறை பவுலர்களுக்கு சாதகமானது என்பதால் தான், பி.சி.சி.ஐ., எதிர்த்து வருகிறது. ஏனெனில், சுழற்பந்து வீச்சை சந்திக்கும் போது, பேட்ஸ்மேன்கள் முன்னால் நகர்ந்து வந்து விளையாடுகின்றனர். அப்போது பந்து "ஸ்டம்சை' தகர்க்கின்றதா என, இம்முறை தெளிவாக காட்டுகிறது. இதனால் அம்பயர்கள் உடனே "அவுட்' கொடுத்து விடுகின்றனர். தவிர, இந்த முறை காரணமாக பந்தை தங்களது கால் "பேடில்' தடுப்பதை விட, பேட்ஸ்மேன்கள் அடித்து விளையாட வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இந்நிலையில், பந்து பேட்டில் பட்டு "கேட்ச்' ஆகும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.இவ்வாறு ஜான் எம்புரே கூறினார்.

