02:31

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தற்போது கிராண்ட் சிலாம் டென்னிஸ் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியை தற்போது உலகின் கோடிக்கணக்கான ரசிகர்கள் கவனித்து வருகிறார்கள்.
தங்களுக்கு பிரியமான வீரர்கள், வீராங்கனைகள் வெற்றி பெற வேண்டும் என்ற துடிப்பு ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பிரெஞ்சு ஓபன் போட்டி தற்போது ஆண்கள் ஒற்றையர் அரை இறுதிப் போட்டியை நெருங்கி உள்ளது. ஒரு அரை இறுதி ஆட்டத்தில் பிரிட்டன் வீரர் ஆண்டி முர்ரே உலக நம்பர் ஒன் தர வரிசை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடாலை எதிர்கொள்கிறார்.
வெள்ளிக்கிழமை நடைபெறும் அரை இறுதியில் ஆண்டி முர்ரே 5 முறை பிரெஞ்சு ஓபன் சாம்பியான நடாலை எதிர்கொள்ளும் போது ரசிகர்களுக்கு மட்டுமல்ல வீரர்கள் இடையேயும் மிகுந்த ஆர்வம் ஏற்படும்.
ஆண்டி முர்ரே கால் இறுதி ஆட்டத்தில் ஜூவான் இக்னாசியோ செலாவை தோற்கடித்து முன்னேறினார். உலக டென்னிஸ் அரங்கில் 4வது இடத்தில் ஆண்டி முர்ரே உள்ளார்.
ரபேல் நடாலை தோற்கடிப்பதற்கு நீண்ட காலமாக காத்து இருக்கிறேன். இந்த ஆண்டு அது சத்தியமாகும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நல்ல வலுவுடன் உள்ளேன். அதனால் நடாலை வீழ்த்த முடியும் என்ற உறுதி உள்ளது என்றும் அவர் கூறினார்.
பிரிட்டனின் பிரட் பெர்ரிக்கு பின்னர் ஒவ்வொரு கிராண்சிலாம் போட்டியிலும் அரை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் வீரராக ஆண்டி முர்ரே உள்ளார். ஆண்டி முர்ரே ஆட்டத்திறன் குறித்து அர்ஜென்டினா வீரர் செலா கூறுகையில்,"அவர் கிராண்ட் சிலாம் போட்டிகளை வெல்லக்கூடிய வல்லமை பெற்றவர். அவரால் எந்த வீரரருக்கு எதிராகவும் சிறப்பாக ஆடமுடியும்" என்றார்.
