22:06
இலங்கை "டுவென்டி-20' தொடரில் பங்கேற்ற இந்திய வீரர்களை அனுமதிப்பது இல்லை என்ற முடிவில் பி.சி.சி.ஐ., உறுதியாக உள்ளது. இதனால் இலங்கை கிரிக்கெட்டுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் ஐ.பி.எல்., தொடர் போல, இலங்கையில் எஸ்.எல்.பி.எல்., "டுவென்டி-20' தொடர் (ஜூலை 19-ஆகஸ்ட் 4ம் தேதி வரை) நடக்க உள்ளது. இது தனியார் நிறுவனம் நடத்தும் தொடர் என்பதால், இந்திய வீரர்கள் பங்கேற்க இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) திடீரென அனுமதி மறுத்தது.
இந்நிலையில், வீரர்கள் பங்கேற்பது குறித்து இலங்கை கிரிக்கெட் நிர்வாகிகள், பி.சி.சி.ஐ., செயலர் சீனிவாசனிடம், போனில் பேசினர்.
மாற்றம் இல்லை:
இதுகுறித்து பி.சி.சி.ஐ., வெளியிட்ட செய்தியில்,""ஐ.பி.எல்., தொடரில் வீரர்கள் பி.சி.சி.ஐ.,யுடன் ஒப்பந்தம் செய்தனர். ஆனால், எஸ்.எல்.பி.எல்., தொடரில், வீரர்கள் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய வேண்டியுள்ளது. தவறு நேர்ந்தால், இலங்கை போர்டு பொறுப்பேற்காது. இதனால், இலங்கைக்கு இந்திய வீரர்களை அனுப்புவதில்லை, என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை,'' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வீரர்கள் பங்கேற்காததால், தொடரின் "டிவி' ஒளிபரப்பு உரிமையை எந்த நிறுவனமும் வாங்க முன்வரவில்லை. இதனால், இலங்கை கிரிக்கெட்டுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
வற்புறுத்த மாட்டோம்:
இதுபற்றி இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் அலுத்கமாகே கூறுகையில்,"" தற்போதைய நிலையில் பி.சி.சி.ஐ., முடிவை மாற்றும்படி, வற்புறுத்த போவதில்லை. ஏனெனில், அவர்கள் தங்கள் நிலையை மாற்றமாட்டார்கள் என்று தெரியும். இதனால் தான், நேரில் சென்று பேசவில்லை. பெரும்பாலும் இந்தியாவை சார்ந்து தான், இத்தொடரை நடத்த இருந்தோம். அவர்கள் வராததால், இலங்கைக்குள் ஒளிபரப்பு ஒப்பந்தம் செய்யவுள்ளோம்,'' என்றார்.
---
