22:04
கிங்ஸ்டன் டெஸ்டில் அம்பயர் ஹார்ப்பர் அளித்த தவறான தீர்ப்புகளால் இந்திய வீரர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இவர், அம்பயராக செயல்படக் கூடாது என போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இவர் சரியாக செயல்பட்டு இருந்தால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இன்னும் விரைவாக வெற்றி பெற்றிருக்கலாம் என, கேப்டன் தோனி பகிரங்கமாக கூறியுள்ளார்.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் நடந்தது. இதன் முதல் இன்னிங்சில் இந்தியா 246, வெஸ்ட் இண்டீஸ் 173 ரன்கள் எடுத்தன. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 252 ரன்கள் எடுத்தது.
பின் 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டாவது இன்னிங்சில் 262 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணிக்கு எதிரான பலமுறை, மோசமான "அவுட்' கொடுக்கப்பட்டது, சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதில் குறிப்பாக ஆஸ்திரேலிய அம்பயர் டேரல் ஹார்ப்பருக்கு எதிராக அதிக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து இந்திய அணி கேப்டன் தோனி கூறியது:
முதல் டெஸ்டில் அம்பயர்கள் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை என்பது உண்மை தான். ஒருவேளை இவர்கள் சரியான முறையில் தீர்ப்பு வழங்கி இருந்தால், போட்டி இன்னும் விரைவாக முடிந்திருக்கும். நாங்களும் விரைவாக ஓட்டலுக்கு திரும்பி இருப்போம்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே இந்திய அணியின் பின்வரிசை வீரர்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகின்றனர். முதல் இன்னிங்சில் 85 ரன்னுக்கு 6 விக்கெட் என்ற நிலையில் களமிறங்கிய ஹர்பஜன், ரெய்னாவுடன் இணைந்து ரன்குவிப்புக்கு உதவினார். இரண்டாவது இன்னிங்சில் அமித் மிஸ்ரா கைகொடுத்தார். இதனால் தான், 300 ரன்களுக்கும் அதிகமாக முன்னிலை பெற முடிந்தது. டிராவிட்டும் அசத்தினார். 250க்கும் மேற்பட்ட பந்துகளை சந்தித்த பின்பும், களைப்படையாமல் ரன்கள் சேர்த்தார்.
பவுலர்கள் ஒருநாள் போட்டியில் இருந்து, டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் போது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். ஒருநாளைக்கு 20 முதல் 25 ஓவர்கள் பவுலிங் செய்ய வேண்டும். தவிர, சோர்வுறாமல் இரண்டாவது இன்னிங்சிலும் விக்கெட்டுகளை வீழ்த்தினால் தான் வெற்றி கிடைக்கும்.
இந்தவகையில், பிரவீண் குமார் வேகமாக மட்டும் பந்து வீசவில்லை. பந்துகளை இரண்டு புறமும் "சுவிங்' செய்தார்.
இவ்வாறு தோனி கூறினார்.
"சீனியர்கள்' எதிர்ப்பு:
இதனிடையே அம்பயரின் மோசமான தீர்ப்பு குறித்து இந்திய அணியின் "சீனியர்' வீரர் ஒருவர் கூறியது:
முதல் டெஸ்டில் 6 முறை தவறான "அவுட்' கொடுத்துள்ளார் டேரல் ஹார்ப்பர் (ஆஸி.,). மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அம்பயர் பட்டியலில் இருந்து இவரை நீக்க வேண்டும். இவர் எங்களுக்குத் தேவையில்லை. ஏனெனில் ஹார்ப்பர் தொடர்ந்து இந்திய அணிக்கு எதிராக செயல்படுவதையே வழக்கமாக கொண்டுள்ளார்.
கடந்த 2000ல் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற போது, மெக்ராத் பந்தை எதிர்கொண்ட சச்சின் குனிந்தார். பந்து இவரது தோள்பட்டையில் பட்டது. ஆனால், ஹார்ப்பர், எல்.பி.டபிள்யு முறையில் அவுட் கொடுத்தார்.
இவ்வாறு அந்த வீரர் தெரிவித்தார்.
மற்றொரு இந்திய வீரர் கூறுகையில்,"" ரெய்னா, ஹர்பஜனுக்கு தவறாக "அவுட்' கொடுக்கப்பட்டது. "நோ பாலில்' தோனி அவுட்டானார். இந்த மூன்றும் ஹார்ப்பரால் தரப்பட்டது. தவிர, டேரன் பிராவோவுக்கு இரண்டு முறை, சந்தர்பாலுக்கு ஒருமுறை சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது,'' என்றார்.
சம்மதிக்குமா பி.சி.சி.ஐ.,
ஒவ்வொரு முறை தவறான தீர்ப்புகள் வழங்கப்படும் போதெல்லாம், விவாதிப்பதோடு சரி, அவ்வளவு தான். ஆனால், உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்ட, அம்பயர் மறுபரிசீலனை முறையை (டி.ஆர்.எஸ்.,) பயன்படுத்த, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதுபோன்ற சம்பவங்களால், பி.சி.சி.ஐ., தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
---
வெற்றி கேப்டன்
இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் என்ற வரிசையில் முதல் இடத்தை பெற்றுள்ளார் தோனி. இதுவரை இவரது தலைமையில் இந்திய அணி பங்கேற்ற 25 போட்டிகளில் 15 வெற்றி, 3 தோல்வி, 7 "டிரா' ஆனது. வெற்றி சதவீதம் 60%.
* அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற கேப்டன் என்ற வரிசையில், கங்குலிக்கு (49ல் 21 வெற்றி) அடுத்த இடத்தை தோனி பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தில் அசார் (47ல் 14 வெற்றி) உள்ளார்.
* தவிர, இதுவரை தோனி தலைமையில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது இல்லை.
---
ராம்பாலுக்கு அபராதம்
முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில், வெஸ்ட் இண்டீசின் ராம்பால் அம்பயர் தீர்ப்பை எதிர்த்து முறையிட்டார். இவரது செயல் ஐ.சி.சி., விதி லெவல் 1ஐ மீறியது என்பதால் போட்டிக்கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல, "அவுட்' இல்லாத போதும், பந்து எங்கு பட்டது என்பதை அம்பயரிடம் தெரிவித்த சமியின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
