22:05
வெஸ்ட் இண்டீசில் உள்ள ஜமைக்காவில் கிரிக்கெட் ஆர்வம் சுத்தமாக காணப்படவில்லை. இங்குள்ள மக்களின் கவனம் எல்லாம் தடகளம், கால்பந்து, நெட் பால், குத்துச்சண்டை போன்ற பிற விளையாட்டுகள் பக்கம் திரும்பியுள்ளது.சிறிய தீவுகள் அடங்கிய வெஸ்ட் இண்டீசில், கிரிக்கெட் ரொம்ப பிரபலம். சாதனை வீரர் பிரையன் லாரா பிறந்த டிரினிடாட்டில் அவரது படங்கள் அடங்கிய "போஸ்டர்களை' பார்க்கலாம். ஆன்டிகுவா சென்றால் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் படங்களை காணலாம். பார்படாசில் ஜோயல் கார்னர், சோபர்ஸ், கிரீனிட்ஜ் போன்றவர்கள் பிரபலம். ஆனால், இன்றைய ஐந்தாவது ஒரு நாள் போட்டி நடக்க உள்ள ஜமைக்காவில் கிரிக்கெட் மோகம் காணப்படவில்லை. மாறாக இங்கு பிறந்த தடகள வீரர் உசைன் போல்ட் தான் ஆதிக்கம் செலுத்துகிறார். நார்மன் மான்லி சர்வதேச விமான நிலையத்தில் இறங்கினால் போல்ட் படங்கள் தான் நம்மை வரவேற்கின்றன. "டிவி'யை "ஆன்' செய்தால் ஜமைக்கா கால்பந்து அணி, ஹோண்டுராசை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றதை தான் முக்கியத்துவம் கொடுத்து காண்பிக்கின்றனர். குத்துச்சண்டை வீரர்களான ஜோ வால்டர்ஸ், நிக்கோலஸ் வால்டர்ஸ் மிகவும் பிரபலமாக உள்ளனர்.
இங்கு பிறந்த கிரிக்கெட் வீரரான கிறிஸ் கெய்ல் பற்றி டாக்சி டிரைவருக்கு கூட தெரிந்திருக்கிறது. கடற்கரைக்கு எதிராக அமைந்துள்ள இவரது இரண்டு மாடி வீட்டை காண்பிக்கின்றனர். ஆனாலும் மின்னல் வேக ஓட்டப்பந்தய வீரர்களான உசைன் போல்ட், அசபா பாவல் அளவுக்கு பிரபலம் இல்லை என்பது பரிதாபமான விஷயம். அமெரிக்க தடகள வீரர் டைசன் கேயை தான் மக்கள் "வில்லனாக' பார்க்கின்றனர். இவர், அடுத்து நடக்க உள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் போல்ட்டை முந்தி ஓடி விடுவாரா என்று தான் பேசுகின்றனர். இங்குள்ள கடற்கரைகளில் இளைஞர்கள் உசைன் போல்ட் மாதிரி 100 மீ., ஓட்டத்தில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். தவிர, விரைவில் உலகின் "நம்பர்-1' குத்துச்சண்டை வீரராக நிக்கோலஸ் வால்டர்ஸ் மகுடம் சூட வேண்டும் என விரும்புகின்றனர். பெண்களுக்கான "நெட் பால்' போட்டிக்கு தான் "மீடியா' அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. சுருக்கமாக சொன்னால், ஜமைக்கா ரசிகர்கள் கிரிக்கெட்டை மறந்து விட்டனர். இவர்களது விருப்பம் மற்ற விளையாட்டுகள் மீது தான் அதிகமாக உள்ளது.
