
டோனி நடித்த மதுபான விளம்பரம் குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விஜய் மல்லையாவின் நிறுவனத்துக்கு ஹர்பஜன் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்திய அணியின் கப்டன் டோனி, ஹர்பஜன் இருவரும் நல்ல நண்பர்கள். இவர்கள் இருவரும் தனித்தனியாக வெவ்வேறு மதுபான விளம்பரங்களில் நடித்துள்ளனர். இதில் பிரபல தொழிலதிபர், பெங்களூரு ரோயல் சாலஞ்சர்ஸ் ஐ.பி.எல். அணியின் உரிமையாளர் விஜய் மல்லையாவின், மதுபான விளம்பரத்தில் டோனி நடித்துள்ளார். இந்த விளம்பரம் ஹர்பஜன், அவரது குடும்பம் மற்றும் சீக்கிய சமூகத்தை கிண்டல் செய்வது போல அமைந்துள்ளது.
இதையடுத்து ஹர்பஜன் சிங் சார்பில் அவரது தாயார் அவ்தார் சிங், விஜய் மல்லையாவின் நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதில், மதுபான விளம்பரத்தினால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு இந்திய கிரிக்கட் அணியின் ஒற்றுமை குலையும். தவிர, எங்களது சமூகத்தையும் கிண்டல் செய்கிறது. இதனால் இந்த விளம்பரம் குறித்து ஹர்பஜன் சிங் குடும்பத்தினரிடம் அனைத்து பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் உடனடியாக மன்னிப்பு கேட்கவேண்டும்.
இந்த விளம்பரத்தை மூன்று நாட்களில் திரும்பபெற வேண்டும். தவிர, நோட்டீஸ் அனுப்புவதற்கு செலவான ஒரு லட்ச ரூபாயையும், இழப்பீடாக தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹர்பஜன் சிங் வக்கீல் வெளியிட்ட செய்தியில், நாங்கள் அனுப்பிய நோட்டீஸ், உங்களது தவறுகளை சரிசெய்து கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது. இதில் குறிப்பிட்டபடி மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கிரிமினல் சட்டப்படி மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும். இதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.