
சச்சினின் சாதனையை ஒரு விருதால் மட்டும் அளவிட முடியாது. விருதுகளை விட சச்சின் மேன்மையானவர் என்று இந்திய மென்பந்தாட்ட நட்சத்திரம் மகேஷ் பூபதி தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள பலரும் சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறி வரும் வேளையில் மகேஷ் பூபதி இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சச்சின் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
சச்சின் விருதுகளை விட மேன்மையான மனிதர். விருதுகள் வரும், போகும். அது இரண்டாவது பட்சம் தான். இந்திய கிரிக்கட்டுக்கு சச்சின் வழங்கியுள்ள பங்களிப்பை பிரதிபலிப்பதாக அது இருக்காது என்றார்.
மென்பந்தாட்டம் குறித்துப் பேசிய பூபதி, 36 வயதானாலும் இப்போதும் வெற்றி பெற வேண்டும் என்ற தாகம் உள்ளது. இப்போதும் போட்டிகளை ரசித்து விளையாடுகிறோம். மே மாதம் மாட்ரிட் ஓபன் மென்பந்தாட்ட போட்டியில் பயஸீடன் இணைந்து பங்கேற்கவுள்ளேன். அதற்காக இப்போது சிறப்பாகத் தயாராகி வருகிறோம் என்றார்.
அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் குறித்து கேட்ட போது முதலில் எங்களை நாங்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பிறகே அதைப் பற்றி சிந்திக்க முடியும் என்றார்.