00:49
-கொச்சி டஸ்கர்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியில் கொச்சி 11 ஓட்டங்களால் தோல்வியை தழுவியதோடு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் முதலிடத்தைப் பெற்றது. சென்னையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ஓட்டங்களை பெற்றது. அடுத்து களமிறங்கிய டஸ்கர்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியடைந்தது.
சென்னை அணியில் ஹசி, முரளி ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். விஜய் 16 ஓட்டங்களில் ஆட்டமிழக்க தொடர்ந்து களமிறங்கிய ரெய்னா 19 ஓட்டங்களுடன் வெளியேறினார். பத்ரிநாத் 13 ஓட்டங்களுடன் வெளியேறினார். மறுமுனையில் நிதானமாக துடுப்பெடுத்தாடிய ஹசி 37 பந்துகளில் 32 ஓட்டங்களை பெற்றார்.
இறுதி கட்டத்தில் ரித்திமான் சாகா 3 சிக்ஸர், 1 பவுண்டரி அடங்களாக 33 பந்துகளில் 46 ஓட்டங்களை பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர வழி வகுத்தார். தோனி 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 20 ஓவர்களில் சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களை பெற்றது.
அடுத்து கொச்சி அணியின் பார்தீவ் படேல், மெக்கல்லம் ஆகியோர் களம் இறங்கினர். படேல் 6 ஓட்டங்களுடன் வெளியேறினார். அடுத்து வந்த ஒய்.ஜி.ராவ் 19 ஓட்டங்களை பெற்றார். மெக்கல்லம் நிதானமாக துடுப்பெடுத்தாடி 37 பந்துகளில் 33 ஓட்டங்களை பெற்றார். கொச்சி வீரர்கள் மெதுவாக ஆடியதால், தோல்வியை மெதுவாக நெருங்கியது. இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடத் தொடங்கிய ஜடேஜா 19 ஓட்டங்களில் வெளியேறினார்.
ஹோட்ஜ் ஆட்டம் மட்டும் அந்த அணிக்கு ஆறுதலாக இருந்தது. அவர் 42 பந்துகளில் 51 ஓட்டங்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 19ஆவது ஓவரில் அவர் இரு சிக்ஸர்களையும், 1 பவுண்டரியையும் விளாசினார். எனினும் அது வெற்றிக்குப் போதுமானதாக இல்லை. 20 ஓவர்களில் கொச்சி அணியால் 141 ஓட்டங்களை மாத்திமே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணியால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.
46 ஓட்டங்களை பெற்ற சூப்பர் கிங்ஸ் அணியின் சாகா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். கொச்சி அணி அனைத்து 14 லீக் ஆட்டங்களிலும் விளையாடி முடிந்து 6 வெற்றிகளை மட்டும் பெற்று போட்டியில் இருந்து வெளியேறியது.
