

மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முந்தைய பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும். அடுத்த சுற்றுக்கு தகுதி பெற குறைந்தது 8 வெற்றிகள் தேவைப்படும்.
தற்போது லீக் சுற்று இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த நிலையில் மும்பையில் நேற்று இரவு நடந்த 62-வது லீக் ஆட்டத்தில் யுவராஜ்சிங் தலைமையிலான புனே வாரியர்ஸ் அணி, சங்கக்கரா தலைமையிலான ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை சந்தித்தது. டாஸ் ஜெயித்த டெக்கான் சார்ஜர்ஸ் அணி கேப்டன் சங்கக்கரா, புனே வாரியர்ஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெஸ்சி ரைடர், மனிஷ் பாண்டே ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அடித்து ஆடினார்கள். அணியின் ஸ்கோர் 4 ஓவர்களில் 31 ரன்னாக இருந்த போது ஜெஸ்சி ரைடர் (14 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 18 ரன்) ஸ்டெயின் பந்து வீச்சில் ரவிதேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து களம் இறங்கிய கங்குலி 5 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் கிறிஸ்டியன் பந்து வீச்சில் பிரக்யான் ஓஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
இதனை அடுத்து தொடக்க ஆட்டக்காரர் மனிஷ்பாண்டே (20 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 23 ரன்) பிரக்யான் ஓஜா பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்த ஓவரில் ராபின் உத்தப்பா (4 ரன்), மிதுன் மன்ஹாஸ் ரன் எதுவும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினார்கள். இதனால் புனே வாரியர்ஸ் அணி 45 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
5-வது வீரராக களம் கண்ட கேப்டன் யுவராஜ்சிங் தன்பங்குக்கு 17 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 23 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ்டியன் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் சங்கக்கராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். மிட்செல் மார்ஷ் (28 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்சருடன்) 37 ரன்னும், பார்னல் 16 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் புனே வாரியர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. டெக்கான் சார்ஜர்ஸ் அணி தரப்பில் கிறிஸ்டியன், பிரக்யான் ஓஜா, அமித்மிஸ்ரா தலா 2 விக்கெட்டும், டுமினி, ஸ்டெயின் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பின்னர் 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஷிகர் தவான் 28 ரன்னும், சன்னி சோஹல் 34 ரன்னும், சங்கக்கரா 25 ரன்னும், டுமினி 23 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். கிறிஸ்டியன் 14 ரன்னுடனும், பரத் சிப்லி 5 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 13 ஆட்டத்தில் ஆடியுள்ள டெக்கான் சார்ஜர்ஸ் அணி பெற்ற 5-வது வெற்றி இதுவாகும்.
8 ஆட்டத்தில் தோல்வி கண்டு இருந்த அந்த அணி ஏற்கனவே அடுத்த சுற்று வாய்பை இழந்து விட்டது. இந்த வெற்றி டெக்கானுக்கு ஆறுதல் வெற்றியாகும். அடுத்த சுற்றுக்குள் நுழைய நூலிழை வாய்ப்புடன் இருந்த புனே வாரியர்ஸ் அணி இந்த (8-வது) தோல்வியின் மூலம் அந்த வாய்ப்பை இழந்தது.