
உலகக்கோப்பையை இந்தியா வென்றதை நினைத்து மகிழ்ச்சியடைந்தாலும், அந்த அணியில் இடம்பெறாதது ஏமாற்றத்தை அளித்தது என்று இந்திய கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா தெரிவித்தார்.
மும்பையில் இதுகுறித்து அவர் மேலும் கூறியது, இந்தியா கோப்பையை வென்ற போது மற்றவர்களைப் போல் நானும் உணர்ச்சி வசப்பட்டேன். 28 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்றது மிகப்பெரிய விடயம்.
ஒவ்வொரு கிரிக்கட் வீரரின் வாழ்க்கையிலும் உலகக் கோப்பையை வெல்வது என்பது மிகப்பெரிய சாதனை. அந்த அணியில் இடம்பெறாததால் வருத்தமடைந்தேன் என்றார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம்பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த இஷாந்த், இந்திய அணியில் எனக்கென நிரந்தர இடத்தைப் பிடிப்பதற்கான நல்ல வாய்ப்பு இது என்றார்.
முன்னணி பந்துவீச்சாளர்கள் ஜாகீர்கான், நெஹ்ரா உள்ளிட்டோர் இடம்பெறாததால் மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் உங்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுமா என்று கேட்டபோது, கூடுதல் சுமை ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. முனாப் படேல் உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடினார். வினய் குமார் சிறப்பாக விளையாடி வருகிறார் என்றார்.