
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கயானாவில் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. முதலில் துடுப்பாட்டம் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 226 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சிம்மன்ஸ் அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார்.
இதன்பிறகு துடுப்பாட்டம் செய்த பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 160 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் அப்துர் ரஹ்மான் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் எடுத்தார். இதையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 152 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சந்தர்பால் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 36 ரன்கள் எடுத்தார். 219 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்திருந்தது. ஷபிக் 40 ரன்களுடனும், மிஸ்பா 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
4 வது நாளான ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் தனது இன்னிங்ஸைத் தொடர்ந்தது. ஆசாத் ஷபிக் மேலும் 2 ரன்கள் சேர்த்த நிலையில் ராம்பாலின் பந்துவீச்சில் போல்டு ஆனார். மிஸ்பா உல் ஹக் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு பாகிஸ்தான் வீரர்கள் வேகமாக வெளியேறினர். உமர் அக்மல் மட்டும் 47 ரன்கள் எடுத்தார். கடைசி விக்கெட்டாக சயீத் அஜ்மல் வெளியேற பாகிஸ்தான் 178 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் மேற்கிந்தியத் தீவுகள் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கேப்டன் சமி 5 விக்கெட்டுகளையும், ராம்பால் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளை வீழ்த்திய கப்டன் சமி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். கடைசியாக 2009 ம் ஆண்டு பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றியை ருசித்தது மேற்கிந்தியத் தீவுகள். அதன்பிறகு இப்போது தான் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.