03:15
ஒலிம்பிக்கில் மரத்தன் போட்டியில் தங்கம் வென்ற கென்ய வீரர் சமி வஞ்ஜிரு கட்டடத்தில் கீழே குதித்து ஞாயிற்றுக்கிழமை அன்று தற்கொலை செய்துகொண்டார்.
வஞ்ஜிரு ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் ஒரு பெண்ணுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அதைப்பார்த்த அவரது மனைவி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது. தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டாலும், அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்கள் குறித்து பொலிஸ் தரப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
2008 ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் மரத்தன் போட்டியில் 2 மணி நேரம், 6 நிமிடங்கள், 32 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் மரத்தன் போட்டியில் தங்கம் வென்ற முதல் கென்ய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
வஞ்ஜிரு ஓட்டப் பந்தயத்தில் மிகப்பெரிய ஜாம்பவானாக இருந்த போதும், அவரது தனிப்பட்ட வாழ்க்கையோ எப்போதும் பிரச்சினைகள் நிறைந்ததாகவே இருந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் தனது வீட்டு பாதுகாவலரை துப்பாக்கியால் தாக்கியதாக கைது செய்யப்பட்டார். இதேபோல் தனது மனைவி மற்றும் வேலைக்காரியை கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக கைது செய்யப்பட்டார். இருப்பினும் அவர் அதிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
ஜப்பானில் சமீபத்தில் சுனாமியின் தாக்குதலுக்கு உள்ளான சென்டாய் நகரில் உள்ள பள்ளியில் படித்தபோது, தனது 15 வது வயதில் ஓட்டத்தை தொடங்கினார் வஞ்ஜிரு. அதன் பிறகு பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற அவர், 2005 ம் ஆண்டு நடைபெற்ற ரூட்டர்டேம் அரை மரத்தன் போட்டியில் உலக சாதனை படைத்தார். தொடர்ந்து லண்டன் மரத்தன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற அவர், 2008 ஓலிம்பிக்கில் தங்கம் வென்றார்.
ஒலிம்பிக் மரத்தன், லண்டன் மரத்தன், சிகாகோ மரத்தன் (2009, 2010) ஆகிய போட்டிகளில் இளம் வயதில் பட்டம் வென்ற ஒரே வீரர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. சிகாகோ போட்டிகளில் அதிவேகத்தில் பந்தய தூரத்தைக் கடந்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். அமெரிக்க மரத்தன் பந்தய வீரர் ரியான் ஹல் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "வஞ்ஜிருவின் மரணச் செய்தி நம்பமுடியவில்லை. அவரின் மரணச் செய்தியால் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தேன்" என குறிப்பிட்டுள்ளார்.
மரத்தனில் வேகமாக ஓடியதைப் போன்றே தனது வாழ்க்கையையும் வேகமாக முடித்துக் கொண்டார் இந்த 24 வயது மரத்தன் சாம்பியன்

