07:25
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடைசி “லீக்” ஆட்டம் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொச்சி டஸ்கர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இரவு 8 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 12 ஆட்டத்தில் 8 வெற்றி, 4 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ளது. அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்து கொள்ள சென்னை அணி வெற்றியை பெற முயற்சிக்கும். அதோடு புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து முன்னிலையில் இருக்க வேண்டுமானால் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது.
அடுத்த சுற்றில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மோதும். இதில் வெல்லும் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும். தோற்கும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இன்னொரு ஆட்டத்தில் மோதும் வாய்ப்பு இருக்கிறது.
இதனால் அடுத்த சுற்றில் நுழையும் 4 அணிகளில் முதல் மற்றும் 2-வது இடத்தை பிடிக்க கடுமையாக போராடும்.
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை தோற்கவில்லை. 6 ஆட்டத்திலும் வென்றது. கொல்கத்தா (2 ரன்), பெங்களூர் (21 ரன்), புனே (25 ரன்), டெக்கானன் சார்ஜர் (19 ரன்), ராஜஸ்தான் ராயல்ஸ் (8 விக்கெட்), டெல்லி (18 ரன்), ஆகிய அணிகளை வென்று இருந்தது.
சேப்பாக்கத்தில் தொடர்ந்து 7-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் சென்னை உள்ளது. சென்னை அணியின் பேட்டிங்கில் கேப்டன் டோனி, விஜய், மைக்ஹஸ்சி, பத்ரிநாத், ரெய்னா ஆகியோரும் பந்து வீச்சில் போலிஞ்சர், அஸ்வின், அல்பிமார்கல் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
கொச்சி அணி விளையாடும் கடைசி “லீக்” ஆட்டம் இதுவாகும். 13 ஆட்டத்தில் 6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் இருக்க முடியும். தோற்றால் வெளியேற்றப்படும்.
அந்த அணியின் பேட்டிங்கில் ஹோட்ஜே, மேக்குல்லம், ரவிந்திர ஜடேஜா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
