00:49
மீதமுள்ள இரண்டு லீக் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியுடன் முடிக்க போராடுவோம் என புணே வாரியர்ஸ் அணியின் கப்டன் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நேற்று முன்தினம் நடந்த ஐ.பி.எல். லீக் போட்டியில் புணே வாரியர்ஸ், டெக்கன் சார்ஜர்ஸ் அணிகள் மோதின. இதில் டெக்கன் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் புணே அணியின் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு வீணானது.
இதுகுறித்து புணே அணி கப்டன் யுவராஜ் சிங் கூறியது, டெக்கன் அணிக்கு எதிராக தோல்வி கண்டதன் மூலம் எங்கள் புணே அணியின் அடுத்த சுற்றுக்கான ஓரளவு வாய்ப்பும் வீணானது. இப்போட்டியில் எங்கள் அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. ஆனால் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தபடி சோபிக்காதது தோல்விக்கு வித்திட்டது.
இத்தொடரில் எங்கள் அணி தொடர்ந்து ஏழு தோல்வியை பதிவு செய்தது பின்னடைவாக அமைந்தது. இருப்பினும் மீதமுள்ள இரண்டு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வெற்றியுடன் முடிக்க முயற்சி செய்வோம்.
இத்தொடரில் எங்கள் அணியில் இருந்து ராகுல் சர்மா உள்ளிட்ட திறமையான இளம் வீரர்கள் சிலரை காண முடிந்தது. இதேபோல சில வெளிநாட்டு வீரர்களும் நம்பிக்கை அளித்தனர் என்று யுவராஜ் சிங் தெரிவித்தார்.
