
ஐ.பி.எல். லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டில்லி அணியை வீழ்த்தியது. இதன் மூலம் இத்தொடரில் இரண்டாவது முறையாக மும்பை அணி
ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது. டில்லி அணி மோசமான துடுப்பாட்டத்தால் தோல்வியடைந்தது.
முதலில் ஆடிய மும்பை அணிக்கு சச்சின்பிளிஜார்ட் ஜோடி நல்ல தொடக்கம் கொடுத்தது. அபாரமாக ஆடிய பிளிஜார்ட் மோர்னே மோர்கல் பந்தில் பவுண்டரி மழை பொழிய மறுமுனையில் சச்சின் நிதானமாக ஓட்டமெடுத்தார். முதல் விக்கெட்டுக்கு 50 ஓட்டங்கள் எடுத்தபோது இர்பான் பதான் வேகத்தில் சச்சின் (14) போல்டானார். சிறிது நேரத்தில் நதீம் பந்தில் பிளிஜார்ட் (37) ஆட்டமிழந்தார்.
பின்னிணைந்த அம்பதிராயுடு,ரோஹித்சர்மா ஜோடி ஆட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டது. டில்லி அணி பந்துவீச்சைப் பதம்பார்த்த இந்த ஜோடி ஓட்டமழை பொழிந்துள்ளது. மூன்றாவது விக்கெட்டுக்கு 87 ஓட்டங்கள் எடுத்தபோது 32 பந்தில் 49 ஓட்டங்கள் (3 சிக்ஸர்,2 பவுண்டரி) எடுத்த ரோஹித் சர்மா,அரைச்சத வாய்ப்பை இழந்தார்.
தொடர்ந்து அதிரடி காட்டிய அம்பதி,நதீம் பந்தில் ஒரு சிக்ஸர்,பவுண்டரி அடித்து தனது அரைச்சதத்தைப் பூர்த்தி செய்தார். இவர் 39 பந்தில் 59 ஓட்டங்கள் (2 சிக்ஸர்,7 பவுண்டரி) எடுத்தபோது ஹோப்ஸ் பந்தில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த போலார்ட் (9*),சைம்ண்ட்ஸ் (4*) ஓரளவு கைகொடுக்க மும்பை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 178 ஓட்டங்கள் குவித்தது. டில்லி அணி சார்பில் மோர்னே மோர்கல், இர்பான் பதான், ஹோப்,நதீம் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
கடின இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு கப்டன் சேவாக்குடன் இணைந்து மீண்டும் வார்னர் தொடக்கம் கொடுத்தார். கிடைத்த வாய்ப்பை மீண்டும் வீணடித்த வார்னர் (1), ஹர்பஜன் சிங் சுழலில் வீழ்ந்தார். இங்ராம் (1), மலிங்கா வேகத்தில் போல்டானார். கடந்த போட்டியில் அசத்திய சேவாக் (2), இம்முறை முனாப் படேல் பந்தில் விரைவில் வெளியேறினார். இதே ஓவரில் நமன்ஓஜாவும் (1) திரும்ப டில்லி அணி 7 ஓட்டத்துக்கு 4 விக்கெட்டை இழந்து திணறியது.
இதன் பின் இணைந்த ஹோப்ஸ்,வேணுகோபால் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிரடியாக விளையாடிய ஹோப்ஸ்குல்கர்னி மற்றும் முனாப் பட்டேல் ஓவரில் தலா இரண்டு பவுண்டரிகள் விளாசினர். ஐந்தாவது விக்கெட்டுக்கு 87 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வேணுகோபால் 37 ஓட்டங்களில் சிக்கினார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைச்சதமடித்த ஹோப்ஸ் (55), ரன் அவுட்டானார். இர்பான் பதான் (23), நகார் டக் அவுட்டாக டில்லி அணியின் தோல்வி உறுதியானது. பின் வந்த மோர்கல் (10), அகர்கார்(7) ஓட்டங்கள் மட்டுமே எடுக்க டில்லி டேர்டெவில்ஸ் அணி 19.5 ஓவரில் 146 ஓட்டங்களுக்கு 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பந்துவீச்சில் அசத்திய மலிங்கா,ஹர்பஜன்,முனாப் பட்டேல் மற்றும் போலார்ட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை அம்பதிராயுடு தட்டிச் சென்றார்.