01:20
இந்தியாவின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் பாலி உம்ரிகர் விருதுக்கு தேர்வு செய்யப்படவுள்ளார்.
இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு வாரியத்தால்(பி.சி.சி.ஐ) வழங்கப்படும் இந்த விருதுடன் ரூ.5 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படும். 2009-10ம் ஆண்டில் கிரிக்கட்டில் சச்சினின் சிறப்பான பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
மும்பையில் வரும் 31ம் திகதி நடைபெறும் பி.சி.சி.ஐ விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியின் போது சச்சினுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கிண்ணத்தை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த இந்திய கிரிக்கட் அணியினரும் இந்த நிகழ்ச்சியின் போது கெளரவிக்கப்படவுள்ளனர்.
இதேபோல் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதும் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்படவிருக்கிறது. மே 31ம் திகதி நடைபெறும் நிகழ்ச்சியின் போது இந்த விருதைப் பெறுபவர் தேர்வு செய்யப்படுவார். விருதுடன் ரூ.15 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படும் என பி.சி.சி.ஐ செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவிலும், உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களும் நிகழ்ச்சியில் கெளரவிக்கப்படவுள்ளனர். விருதுபெறும் மற்ற வீரர்கள் ரஞ்சிப் போட்டியில் அதிக ரன் குவித்த மணீஷ் பாண்டே, அதிக விக்கெட்டுகள் எடுத்த அபிமன்யு மிதுன் ஆகியோருக்கு மாதவராவ் சிந்தியா விருது வழங்கப்படுகிறது.
16 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கட்டில் சிறப்பாக விளையாடிய அபராஜித், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் சிறப்பாக ஆடிய பார்கவ் மேராய், 22 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் சிறப்பான பங்களிப்பை அளித்த நடராஜ் பெஹேரா ஆகியோருக்கு எம்.ஏ.சிதம்பரம் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
பாலி உம்ரிகர் விருதை பெறவுள்ள சச்சின் 2009-10ம் ஆண்டில் மட்டும் 10 பயிற்சி போட்டிகளில் விளையாடி ஒரு இரட்டைச் சதம், 5 சதங்களுடன் 1062 ரன்கள் குவித்தார். 12 ஒருநாள் ஆட்டங்களில் இரட்டைச் சதம் உள்பட 695 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
