01:49
இந்த ஆட்டத்தில் தோற்றதன் மூலம் ராஜஸ்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. கொச்சி அணியின் பிராட் ஹாட்ஜ் பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு பேட்டிங்கிலும் 33 ரன்கள் எடுத்தார்.
முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 18.3 ஓவர்களில் 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய கொச்சி அணி 7.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
முன்னதாக பூவா தலையா வென்ற கொச்சி களத்தடுப்பை தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணியின் திராவிட் 1 ரன்னிலும், பாஷல் 16 ரன்களிலும் வெளியேறினர். இதன் பிறகு களமிறங்கிய வாட்சன், கொச்சி வீரர் பிரசாந்தின் எட்டாவது ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசினார். ஆனாலும் அவரின் அதிரடி நிலைக்கவில்லை. அவர் 13 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து பரமேஸ்வரன் பந்துவீச்சில் போல்டு ஆனார்.
பின்னர் வந்தவர்களில் மேனரியா மட்டுமே 31 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் விரைவாக வெளியேற 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ராஜஸ்தான்.
பின்னர் ஆடிய கொச்சி அணியில் மெக்கல்லம் வெளுத்து வாங்கினார். ஷான் டெய்ட் வீசிய முதல் ஓவரில் கிடைத்த ப்ரீ கிட் வாய்ப்பில் சிக்ஸரை விளாசினார்.
ஜேக்கப் ஓரம் வீசிய இரண்டாவது ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசினார். மறுமுனையில் ஜெயவர்த்தனா 6 ரன்களில் வெளியறினார். மெக்கல்லம் 12 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு ஜோடி சேர்ந்த பார்தீவ் பட்டேலும், ஹாட்ஜும் தங்கள் பங்குக்கு கிடைத்த பந்துகளை எல்லாம் பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விரட்டினர். இதனால் 7.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது கொச்சி.
பட்டேல் 14 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 21 ரன்களும், ஹாட்ஜ் 17 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 33 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். ஹாட்ஜ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
