ராஜஸ்தான் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷேன் வொட்சன் 47 பந்துகளில் 6 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 89 ஓட்டங்களை அதிரடியாக பெற்று அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 133 ஓட்டங்களை பெற்றது. பின்னர் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 13.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றிபெற்றது.
முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சுமன் 5 ஓட்டங்களிலும், அதன்பிறகு வந்த ராயுடு 2 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். நிதானமாக ஆடிய சச்சின் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
பொல்லார்டு 20 ஓட்டங்களில் வொட்சன் பந்துவீச்சில் போல்டு முறையில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 47 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 58 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார். இறுதியில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 133 ஓட்டங்களை பெற்றது.
தொடரந்து 134 எனும் வெற்றி இலக்கை அடைய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய வொட்சனும், திராவிட்டும் வேகமாக ஓட்ட குவிப்பில் ஈடுபட்டனர். ஹர்பஜன் வீசிய இரண்டாவது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசினார் வொட்சன்.
அதன்பிறகு மாலிங்க, குல்கர்னி என எல்லா பந்துவீச்சாளர்களையும் பதம்பார்த்தார் வொட்சன். இதனால் அவ்வப்போது பவுண்டரிகளும், சிக்ஸர்களும் பறந்தன. 30 பந்துகளில் அரைசதமடித்தார் வொட்சன்.
குறிப்பாக மாலிங்காவின் பந்துவீச்சில் மட்டும் 3 சிக்ஸர்களை விளாசினார் வொட்சன். 14-வது ஓவரின் முதல் பந்தில் திராவிட் பவுண்டரியை விளாச ராஜஸ்தான் விக்கெட் இழப்பின்றி 134 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
திராவிட் 32 பந்துகளில் 43 ஓட்டங்களுடனும், வொட்சன் 47 பந்துகளில் 89 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 89 ஓட்டங்களை அதிரடியாக பெற்ற வொட்சன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
14 லீக் ஆட்டங்களிலும் விளையாடிய ராஜஸ்தான் அணி இறுதி ஆட்டத்தில் வெற்றிபெற்று 13 புள்ளிகளுடன் போட்டியிலிருந்து வெளியேறியது.
இந்த ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் தோற்றதால் அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது மும்பை. பஞ்சாப் அணி இன்று நடைபெறும் டெக்கானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறும்பட்சத்தில், 22ஆம் திகதி நடைபெறும் மும்பை -கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வெற்றிபெறும் அணியே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். இதனால் அந்த ஆட்டம் இரு அணிகளுக்குமே வாழ்வா, சாவா ஆட்டமாகிவிடும். பஞ்சாப் தோற்கும் பட்சத்தில் கொல்கத்தா, மும்பை அணிகள் எளிதாக அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும்.
மும்பைக்கு எதிரான ஆட்டத்தோடு ஐபிஎல்லில் இருந்து விடைபெற்றார் வோர்ன். இந்த ஐபிஎல் தொடரோடு ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெறப் போவதாக வோர்ன் அறிவித்திருந்தார். அதனால் இறுதி ஆட்டத்தை வென்று வோர்னுக்கு அர்ப்பணிப்போம் என்று ராஜஸ்தான் வீரர்கள் கூறியிருந்தனர். அதன்படியே அவர்கள் வோர்னை வெற்றியோடு வழியனுப்பிவிட்டனர். அடுத்த ஐபிஎல் முதல் வோர்ன் ராஜஸ்தானின் பயிற்சியாளராக இருப்பார்.