00:40
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 66-வது “லீக்” ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (வெள்ளிக் கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் தெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.12 ஆட்டத்தில் 8 வெற்றி, 4 தோல்வியுடன் 16 புள்ளிகளுடன் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் இன்னும் அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்யவில்லை. இன்றைய ஆட்டத்தில் வெல்வதன் மூலம் அந்த அணி அடுத்த சுற்றுக்கு நுழையும் வாய்ப்பை பெறும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடும் கடைசி “லீக்” ஆட்டம் இதுவாகும். இதுவரை விளையாடிய 13 ஆட்டத்தில் 5 வெற்றி, 7 தோல்வியுடன் (ஒரு போட்டி முடிவு இல்லை) 11 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.
இன்றைய ஆட்டத்தில் வெல்லும் நிலையில் புள்ளிகள் பட்டியலில் கொச்சியை விட முன்னிலை பெறும். மும்பை அணி ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்சிடம் 7 விக்கெட்டில் தோற்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மும்பை அணி வெற்றி பெற முயற்சிக்கும்.
மும்பை அணி கடந்த 2 ஆட்டத்தில் (பஞ்சாப், டெக்கான்) தோற்றது. தொடர் தோல்வியை தவிர்க்கும் விதமாக மும்பை அணி விளையாடும். கேப்டன் தெண்டுல்கர், ராயுடு, சதீஷ், ரோகித்சர்மா, போலார்ட் போன்ற சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்களும், மலிங்கா, முனாப்பட்டேல் போன்ற சிறந்த பவுலர்களும் அணியில் உள்ளனர்.
ராஜஸ்தான் அணி தொடர்ந்து 4 ஆட்டத்தில் (சென்னையிடம் 2 முறை, பெங்களூர், கொச்சியிடம் தலா 1 முறை) தோற்றது. இதனால் கடைசி “லீக்” ஆட்டத்தில் வெற்றி பெற ராஜஸ்தான் போராடும்.
