22:43
சூதாட்டத்தில் இந்திய வீரர்களுக்கு தொடர்பு உள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது, சிறுபிள்ளைத்தனமானது என இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
இந்த மாதிரியான உண்மைக்கு புறம்பான செய்திக்கு கருத்துத் தெரிவிக்க முடியாது. தேவைப்பட்டால் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் ஆலோசிப்பேன், மற்றபடி கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது என்றும் கூறிவிட்டார்.
இந்தியாவின் முன்னணி விளையாட்டு இதழ் ஒன்று கிரிக்கெட் வீரர்களுக்கும், சூதாட்டத் தரகர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய வீரர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. இதுதொடர்பான தகவல்களை பிசிசிஐ மற்றும் ஐசிசி ஆகியவற்றிடமே தெரிவிப்போம் என்றும் கூறப்பட்டுள்ளது.
சண்டீகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் சகவீரர் யுவராஜுடன் பங்கேற்ற ஹர்பஜன், இந்த விஷயம் தேவையில்லாமல் ஊடகங்களால் பெரிதுபடுத்தப்படுகிறது என்றார்.
இரு வீரர்களிடம் திருமணம் குறித்து கேட்டபோது, இந்த விஷயத்தில் என்னை விட, எனது நாட்டு மக்களே அதிக கவலைப்படுகிறார்கள் என்றார். யுவராஜ் கூறுகையில், "இப்போது திருமணம் பற்றிய சிந்தனை இல்லை. கிரிக்கெட் பற்றிய எண்ணம் மட்டுமே உள்ளது' என்றார்.
