00:42
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீரர் ஷானே வார்னே. 2007-ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்றார். டெஸ்ட்டில் 700 விக்கெட் கைப்பற்றினார். ஒருநாள் போட்டியில் 293 விக்கெட் எடுத்தார். 1999-ம் ஆண்டு உலக கோப்பையை ஆஸ்திரேலிய வெல்ல முக்கிய பங்கு வகித்தார்.சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்ற வார்னே ஐ.பி.எல். போட்டி அறிமுகம் ஆனதில் இருந்து ஆடினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக பணியாற்றினார். அறிமுக ஐ.பி.எல். போட்டியிலேயே அவர் ராஜஸ்தான் அணிக்கு கோப்பையை பெற்றுக் கொடுத்தார். 2-வது, 3-வது ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் அரை இறுதியை எட்டவில்லை. 4-வது ஐ.பி.எல். போட்டியில் அவரை அந்த அணி நிர்வாகம் தக்க வைத்துக் கொண்டது.
இந்த ஐ.பி.எல். போட்டியோடு விடை பெறுவதாக அவர் எற்கனவே அறிவித்து இருந்தார். நேற்றைய கடைசி போட்டியான மும்பை அணிக்கு எதிராக வெற்றியோடு வார்னே விடை பெற்றார். இந்த ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் அணி 6-வது இடத்தை பிடித்தது. ஓய்வு பெற்ற அவருக்கு ராஜஸ்தான் அணி வீரர்கள் பிரியா விடை கொடுத்தனர். பின்னர் வார்னே நிருபர்களுக்கு அளித்த போட்டியில் கூறியதாவது:-
இது எனது கடைசி ஆட்டம் என்று சொல்ல மாட்டேன். மீண்டும் எனது ஆட்டம் தொடரும். பயிற்சியாளராக இருப்பேன். முழு நேர பயிற்சியாளராக இருக்க முடியாது. ஐ.பி.எல். போட்டியில் 4 ஆண்டுகளாக விளையாடியதில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 6 ஆட்டத்தில் வெற்றி பெற்றோம். சில ஆட்டங்களில் தோற்றது ஏமாற்றம் அளித்தது. இது வரை நடந்த ஐ.பி.எல். போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற 2-வது அணி ராஜஸ்தான் என்பதில் பெருமை அடைகிறேன். ஐ.பி.எல். போட்டி சிறப்பாக அமைந்தது. 2008-ம் ஆண்டு போட்டி எனக்கு மறக்க இயலாதது.
இவ்வாறு அவர் கூறினார்.
