01:02
சீனாவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ள சுதிர்மான் கோப்பை பாட்மிண்டன் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் பங்கேற்கும் இந்திய அணி பலவீனமாக உள்ளது என ஜுவாலா கட்டா தெரிவித்துள்ளார்.
இந்தியா சார்பில் கலப்பு இரட்டையர் பிரிவில் அருண் விஷ்ணு-அபர்ணா பாலன், பிரணவ் சோப்ரா-சவந்த் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
ஜுவாலா கட்டாவின் கலப்பு இரட்டையர் பார்ட்னரான திஜு காயம் அடைந்துள்ளார். அதனால் மாற்று ஆட்டக்காரரை தேர்வு செய்யாமல் ஜுவாலாவும் கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்திலிருந்து விலகியுள்ளார்.
இந்த நிலையில் இதுகுறித்து அவர் மேலும் கூறியது: திஜு இல்லாமல் சுதிர்மான் கோப்பையில் சிறப்பாக ஆட முடியாது. அவர் இல்லாத குறையை இப்போது உணர்கிறேன். இந்தியா சார்பில் கலப்பு இரட்டையர் பிரிவில் பங்கேற்கும் அணி மிகவும் பலவீனமானது என்றார்.
நான் இந்த முறை கலப்பு இரட்டையர் பிரிவில் பங்கேற்காததால் அதற்காக பயிற்சியில் ஈடுபடவில்லை. இந்தியா சார்பில் கலப்பு இரட்டையர் பிரிவில் பங்கேற்பவர்கள் சிறந்த ஜோடிகள்தான். ஆனாலும் அவர்களுக்கு சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் மிகவும் குறைவே. இருப்பினும் அவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.
சுதிர்மான் கோப்பையை இந்தியா வெல்ல வாய்ப்புள்ளதா என்று நிருபர்கள் கேட்டதற்கு,"இப்போதைய சூழலில் அது மிகவும் கடினமானதே. சீன தைபே, தாய்லாந்து அணிகளையும் பலமான அணிகள் என்று சொல்லிவிட முடியாது. அதேசயம் நாம் பலமான அணியைக் கொண்டிருக்கவில்லை" என்றார்.
