23:30
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 8-ந்தேதி தொடங்கியது. இதில் பங்கேற்று விளையாடி வரும் 10 அணிகளும் 14 “லீக்” ஆட்டங்கள் விளையாட வேண்டும்.தற்போது லீக் ஆட்டங்கள் முடியும் தருவாயை நோக்கி உள்ளது. மொத்தம் உள்ள 70 “லீக்” ஆட்டத்தில் நேற்றுடன் 59 போட்டிகள் முடிந்துவிட்டன. இன்னும் 11 “லீக்” ஆட்டம் எஞ்சியுள்ளன.
இந்தப் போட்டியில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த தெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் தற்போது சற்று பின் தங்கியுள்ளது.
கிறிஸ் கெய்லின் வருகையால் பெங்களூர் புதிய பலத்துடன் திகழ்கிறது. அந்த அணி தற்போது முதல் முறையாக புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்து உள்ளது.
கொல்கத்தா அணியை வென்றதன் மூலம் அந்த அணி முன்னேறி உள்ளது. 12 ஆட்டத்தில் விளையாடி 8-ல் வெற்றி பெற்றது. 3 ஆட்டத்தில் தோற்றது, ராஜஸ்தானுடன் மோதிய ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 17 புள்ளிகளுடன் அந்த அணி முன்னிலை பெற்றுள்ளது.
இனி வரும் ஆட்டங்களில் அந்த அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் (17-ந் தேதி) சென்னை சூப்பர் கிங்ஸ் (22-ந் தேதி) மோத வேண்டும். இந்த இரண்டிலும் வென்றால் அந்த அணிதான் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும்.சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 8 வெற்றி, 4 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று உள்ளன. ரன் ரேட்டில் சென்னை முன்னிலை பெற்றுள்ளதால் 2-வது இடத்திலும் மும்பை இந்தியன்ஸ் 3-வது இடத்திலும் உள்ளன.
சென்னை அணி இனி வரும் ஆட்டங்களில் கொச்சி (18-ந்தேதி) பெங்களூர் (22-ந் தேதி) அணிகளுடனும், மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் (20-ந் தேதி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (22-ந் தேதி) அணிகளுடன் மோத வேண்டும்.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 14 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி புனே வாரியர்சை (19-ந் தேதி), மும்பை இந்தியன்சை (22-ந் தேதி) மோத வேண்டி உள்ளது. இதில் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே வாய்ப்பை பெறும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் (11), பஞ்சாப் (10), கொச்சி (10), ஆகிய அணிகள் அதற்கு அடுத்த நிலையில் உள்ளன. புனே வாரியர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், டெல்லி டேர்டெவிலிஸ் ஆகிய 3 அணிகளும் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தன.
