03:23
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 64-வது “லீக்” ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 12 ஆட்டத்தில் 8 வெற்றி, 4 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. சென்னை அணி புனே வாரியர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை தலா 2 முறை வென்றன. பெங்களுர், கொல்கத்தா, டெக்கான் சார்ஜர்ஸ் டெல்லி அணிகளை தலா 1 ஒருமுறை வென்றன. பஞ்சாப், மும்பை, கொல்கத்தா, கொச்சி அணிகளிடம் தோற்றது.
சென்னை சூப்பர்கிங்ஸ் 16 புள்ளிகளுடன் ரன்ரேட்டிலும் நல்லநிலையில் இருப்பதால் அடுத்த சுற்றில் நுழைவதில் சிரமம் இருக்காது என்று தெரிகிறது. உறுதியான வாய்ப்பை பெற சென்னை 9-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. உள்ளூர் மைதானமான சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 6 போட்டியில் ஆடி 6 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. தொடர்ந்து இங்கு 7-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.
சென்னை அணியின் பேட்டிங்கில் கேப்டன் டோனி, மைக்ஹஸ்சி, ரெய்னா, முரளி விஜய், பத்ரிநாத் ஆகியோர் நல்லநிலையில் உள்ளனர். பந்துவீச்சில் போலிஞ்சர், மார்கல், அஸ்வின் முத்திரை பதிக்க கூடியவர்கள்.
சென்னை சூப்பர்கிங்ஸ் ஏற்கனவே கொச்சி அணியிடம் கொச்சியில் நடந்த ஆட்டத்தில் தோற்றது. மழையால் இந்த தோல்வி ஏற்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய நிலையில் சூப்பர்கிங்ஸ் அணி உள்ளது.
சென்னை அணிக்கு கொச்சி டஸ்கர்ஸ் கேரளா எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாடக்கூடியது. கேப்டன் ஜெயவர்த்தனே இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாட சென்றதால் பார்த்தீவ் பட்டேல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் மேக்குல்லம், ஹாட்ஜே போன்ற சிறந்த பேட்ஸ் மேன்களும், ஆர்.பி.சிங் வினய்குமார் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.
கொச்சி அணி அடுத்த சுற்றில் நுழைவதற்கான வாய்ப்பு மிகமிக குறைவே. அந்த அணி மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்த வேண்டும். அதே நேரத்தில் கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் எஞ்சிய ஆட்டங்களில் தோற்க வேண்டும். அப்படி நிகழ்ந்தால் 3 அணிகளும் 14 புள்ளியுடன் சமநிலையில் இருக்கும். ரன்ரேட் அடிப்படையில் ஒரு அணி முன்னேறும். கொச்சி அணியின் ரன்ரேட் -0.18 ஆகும். இதனால் அந்த அணிக்கு வாய்ப்பு இல்லை.
