08:27
தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதால், ஐ.பி.எல் போட்டியில் மீதமுள்ள ஆட்டங்களில் வீரேந்திர சேவாக் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி அம்ரித் மதூர் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனிடையே டெல்லி அணியின் உரிமையாளர்களான ஜி.எம்.ஆர் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் பி.பி.வஞ்சி கூறியதாவது: தோள் பட்டையில் ஏற்பட்ட காயம் தொடர்பாக சேவாக் இந்திய கிரிக்கட் வாரியத்திடம் தெரிவித்தார்.
இதையடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளையும் கிரிக்கட் வாரியம் செய்து வருகிறது. விரைவில் அவர் லண்டன் செல்கிறார்.
எனினும் சேவாக்கிற்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் திகதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டிகளில் பங்குபெறுவதற்காக இந்திய அணி ஜூன் 1ம் திகதி புறப்பட்டுச் செல்கிறது. இந்த தொடரிலும் சேவாக் கலந்துகொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது.
