21:38
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடக்கவுள்ளது. கடந்த போட்டியில் வென்ற சுரேஷ் ரெய்னா தலைமையிலான இளம் இந்திய அணி, மீண்டும் வெற்றி பெற காத்திருக்கிறது.வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்துள்ள ரெய்னா தலைமையிலான இளம் இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது.
ரோகித் அபாரம்:
நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சர்வான் (56), சாமுவேல்ஸ் (55) கைகொடுக்க, 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 214 ரன்கள் எடுத்தது.
பின் சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் (51), ரோகித் சர்மா (68*), சுரேஷ் ரெய்னா (43) உள்ளிட்டோர் கைகொடுக்க, 44.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 217 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இரண்டாவது ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயின் (டிரினிடாட்) நகரில் இன்று நடக்கவுள்ளது. துவக்க வீரராக பார்த்திவ் படேல் சாதிக்க வேண்டும். அரைசதம் கடந்து அசத்திய மற்றொரு துவக்க வீரர் ஷிகர் தவான் இன்றும் கைகொடுக்கலாம். கடந்த போட்டியில் சோபிக்காத விராத் கோஹ்லி, இன்று எழுச்சி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா, கேப்டன் சுரேஷ் ரெய்னா "சூப்பர் பார்மில்' இருப்பது நல்ல விஷயம். இவர்களுடன் பத்ரிநாத், யூசுப் பதான் உள்ளிட்டோர் அதிரடி காட்டும் பட்சத்தில் இமாலய இலக்கை எட்டலாம்.
ஹர்பஜன் நம்பிக்கை:
ஹர்பஜன் சிங் இன்றும் விக்கெட் மழை பொழியலாம். இவருக்கு அமித் மிஸ்ரா, அஷ்வின், சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான் உள்ளிட்டோர் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில், சுலப வெற்றி பெறலாம். வேகப்பந்துவீச்சில் முனாப் படேல், பிரவீண் குமார் நம்பிக்கை அளிக்கின்றனர்.
போலார்டு வாய்ப்பு:
வெஸ்ட் இண்டீஸ் அணியில் அனுபவ கிறிஸ் கெய்ல் இல்லாதது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் முதல் போட்டியில் சிறந்த துவக்கம் கிடைக்காததால், நல்ல ஸ்கோரை பெறமுடியவில்லை. எனவே இன்று சிம்மன்ஸ், எட்வர்ட்ஸ் ஜோடி சிறந்த துவக்கம் அளிக்க முயற்சிக்க வேண்டும். கடந்த போட்டியில் ஏமாற்றிய டேரன் பிராவோ, இன்று எழுச்சி பெற வேண்டும். "மிடில்-ஆர்டரில்' அரைசதம் கடந்து அசத்திய சர்வான், சாமுவேல்ஸ் ஜோடி இன்றும் கைகொடுக்கும் பட்சத்தில், நல்ல ஸ்கோரை பெறலாம். போலார்டு, ஆன்ட்ரி ரசல் உள்ளிட்டோருக்கு விளையாடும் லெவன் அணியில் வாய்ப்பு அளித்தால் நல்லது.
பலமான வேகம்:
வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துவீச்சு பலமாக காட்சி அளிக்கிறது. கேப்டன் சமி, ரவி ராம்பால் உள்ளிட்ட வேகங்கள் துல்லியமாக பந்துவீசும் பட்சத்தில் விக்கெட் மழை பொழியலாம். சுழலில் தேவேந்திர பிஷூ நம்பிக்கை அளிக்கிறார்.
வெற்றிநடையை தக்க வைத்துக் கொள்ள இந்தியாவும், சொந்த மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்ய வெஸ்ட் இண்டீசும் போராட இருப்பதால், விறுவிறுப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.
