21:40
: "வெஸ்ட் இண்டீஸ் தொடர் மூலம் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, அணியில் நிரந்தர இடம் பிடிக்க முயற்சிப்பேன்,'' என, இந்திய வீரர் ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் "மிடில்-ஆர்டரில்' அசத்திய இந்தியாவின் ரோகித் சர்மா, 75 பந்தில் 68 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகனாக வலம்வந்தார்.
இதுகுறித்து ரோகித் சர்மா கூறியதாவது: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றியுடன் துவக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. சமீபத்திய உலக கோப்பை தொடரில் விளையாடாதது ஏமாற்றம் அளிக்கிறது. இதுகுறித்து அதிகம் சிந்திக்காமல், வெஸ்ட் இண்டீஸ் தொடர் மூலம் கிடைத்த பொன்னான வாய்ப்பை வீணடிக்காமல் சாதிக்க வேண்டும். இதன்மூலம் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்கும் வாய்ப்பு உண்டாகும்.
பொதுவாக இந்திய அணி விளையாடும் போட்டிகளில், சிறப்பாக செயல்படும் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் மீடியா மத்தியில் பிரபலமாக பேசப்படுவார்கள். கடந்த மூன்று மாதங்களாக உடற்தகுதியில் கூடுதல் கவனம் செலுத்தினேன். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. எஞ்சிய போட்டிகளிலும் முழுத்திறமையை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுக்க போராடுவேன்.
சீனியர் வீரர்கள் இல்லாத நிலையில் என்னைப்போன்ற ஓரளவு அனுபவம் பெற்ற வீரர்கள் மீது கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது. இந்த எதிர்பார்ப்பு, போட்டியில் சாதிக்க உதவியது. சச்சின், சேவக், காம்பிர் உள்ளிட்ட துவக்க வீரர்கள் இல்லாததால், இந்திய அணியின் துவக்கம் சற்று வலுவிலந்து காணப்படுகிறது. இருப்பினும் பார்த்திவ் படேல் மற்றும் ஷிகர் தவான் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன்மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தனர். இவர்கள் சிறந்த துவக்கம் அளிப்பார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.
