21:36
"கேப்டனாக அப்ரிதி முதிர்ச்சி பெறவில்லை. வெற்றிக்கான வியூகம் அமைக்க தெரியவில்லை. மற்றவர்கள் கூறும் ஆலோசனைகளையும் கேட்பதில்லை,'' என, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் பகிரங்கமாக புகார் கூறியுள்ளார். அப்ரிதி மற்றும் வக்கார் யூனிஸ் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அணி தேர்வில் வக்கார் தலையிடுவதாக அப்ரிதி குற்றம்சாட்டினார். பின் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) உறுப்பினர்களை விமர்சனம் செய்தார். இதனை தொடர்ந்து புதிய கேப்டனாக மிஸ்பா நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அப்ரிதி அறிவித்தார்.
இந்தச் சூழலில் வெஸ்ட் இண்டீஸ் தொடர் குறித்த தனது அறிக்கையில் அப்ரிதி மீது வக்கார் சரமாரியாக புகார் கூறியுள்ளார். இதில் வக்கார் கூறியிருப்பதாவது:
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடரில் அப்ரிதி மற்ற வீரர்களின் கருத்துக்களையும், அறிவுரையும் கேட்கவில்லை. ஒழுங்கீனமாக நடந்து கொண்டார். கடைசி இரண்டு போட்டிகளில் அணியினருடன் வெற்றி பெறுவதற்கான எந்த திட்டமும் வகுக்காமல் யாருடனும் ஆலோசிக்காமல் இருந்தார். இதுவே தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது. அப்ரிதி உடனான பிரச்னையை தீர்ப்பதற்காக பி.சி.பி., கேள்வி கேட்ட போதும் அதற்கு தகுந்த பதில் அளிக்கவில்லை. கேப்டனாக அவரிடம் போதிய முதிர்ச்சி காணப்படவில்லை.
இவ்வாறு வக்கார் தெரிவித்துள்ளார்.
