21:34
"பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் நியமிக்கப்பட்டது, தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டின் சிறந்த முடிவு,'' என, முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் போலக் பாராட்டியுள்ளார்.தென் ஆப்ரிக்க அணியின் புதிய பயிற்சியாளராக கேறி கிறிஸ்டன் நியமிக்கப்பட்டார். இவர் முன்னதாக இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டார். இவரது கால கட்டத்தில் இந்திய அணி டெஸ்ட் ரேங்கிங்கில் "நம்பர்-1' இடம் பிடித்தது. தவிர, சமீபத்திய உலக கோப்பை தொடரிலும் சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது.
இதுகுறித்து தென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் வேகப்பந்துவீச்சாளரான போலக் கூறியதாவது: கிறிஸ்டனை பயிற்சியாளராக நியமித்தது தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டு எடுத்த மிகச் சரியான முடிவு. இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுத்த இவர், தென் ஆப்ரிக்க அணியின் முன்னேற்றத்துக்கும் நிச்சயம் பாடுபடுவார். இவரது வருகையால் தென் ஆப்ரிக்க அணி, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிகப் பெரிய வளர்ச்சி அடையும் என நம்புகிறேன். இதேபோல முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆலன் டொனால்டை, பவுலிங் பயிற்சியாளராக நியமித்தது பாராட்டுக்குரியது. ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகளுக்கு டிவிலியர்சை கேப்டனாகவும், ஆம்லாவை துணைக் கேப்டனாகவும் நியமித்தது வரவேற்கத்தக்கது. இதன்மூலம் விரைவில் மிகச் சிறந்த அணியை உருவாக்க முடியும் என எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு போலக் கூறினார்.
