13:44

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதிப்பேன் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் "ஆல் ரவுண்டர்" போலார்டு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. சமீபத்தில் நடந்த "டுவென்டி 20" போட்டியில் விளையாடாத போலார்டு, டுவைன் பிராவோ, சர்வான் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் ஒருநாள் தொடருக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலார்டு கூறியதாவது, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். இம்முறை இந்திய அணியில் சச்சின், சேவாக், டோனி, காம்பிர், யுவராஜ், ஜாகிர், நெஹ்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாதது எங்களுக்கு சாதகமாக அமையலாம். அதே வேளையில் தற்போதுள்ள இந்திய அணியை குறைத்து மதிப்பிடக் கூடாது. ஏனெனில் அணியின் இடம் பெற்றுள்ள வீரர்கள், சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். தொடரில் சிறந்த அனுபவம் பெற்றுள்ளனர்.
எங்கள் அணியில் திறமையான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நிறைய வீரர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெற்றுள்ளனர். எனவே இம்முறை எங்கள் அணி, தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது.
இந்தியாவுக்கு எதிராக துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என அனைத்திலும் சாதிக்க கூடுதல் பயிற்சி மேற்கொண்டுள்ளேன். இத்தொடர் எனக்கும் மிக முக்கியமான ஒன்று. ஏனெனில் உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் விளையாட இருப்பதால், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. முழுத்திறமையை வெளிப்படுத்தி சாதிக்க முயற்சிப்பேன் என்று போலார்டு தெரிவித்தார்.
