22:35
இலங்கை பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூலை 19-ந்தேதி முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரை இலங்கையில் நடத்தப்படுகிறது. முதல் முறையாக அங்கு நடத்தப்படும் இந்தப் போட்டியில் கிறிஸ்கெய்ல், அப்ரிடி, கிப்ஸ், போலார்ட் போன்ற முன்னணி வீரர்கள் உள்பட வெளிநாட்டை சேர்ந்த 39 வீரர்கள் பங்கேற்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தப்போட்டியில் முனாப்பட்டேல், அஸ்வின், மனோஜ் திவாரி, தினேஷ் கார்த்திக், சவுரவ் திவாரி உள்பட 12 இந்திய வீரர்கள் பங்கேற்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய வீரர்கள் இலங்கையில் நடைபெறும் பிரிமீயர் லீக் 20 ஓவர் போட்டியில் பங்கேற்க தடை விதித்துள்ளது.
வீரர்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து விட்டது. சிங்கப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனம் நடத்தும் போட்டிக்கு வீரர்கள் பங்கேற்பதை அனுமதிக்க இயலாது என்று கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்திய வீரர்கள் இலங்கை 20 ஓவர் போட்டியில் பங்கேற்க அனுமதி மறுத்ததற்கு வேறு காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை பிரிமீயர் லீக் 20 ஓவர் போட்டி அமைவதற்கு லலித்மோடியின் பங்களிப்பு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் சந்தேகிக்கிறது இதன் காரணமாகவே வீரர்களை அனுமதிக்கவில்லை.
இலங்கை பிரிமீயர் லீக்20 ஓவர் போட்டியை சோமர் செட் என்டர் டெயன்மென்ட் வென்சர்ஸ் (எஸ்.இ.வி) என்ற நிறுவனம் நடத்துகிறது. இந்த நிறுவனத்துடன் மோடிக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. இதுகுறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, இலங்கை பிரிமீயர் லீக் போட்டி உருவாவதற்கு லலித்மோடி காரணமாக இருந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்து உள்ளது. அவருக்கு வேண்டியவர்கள் இணைந்து எஸ்.இ.வி. நிறுவனம் மூலம் இலங்கை பிரிமீயர் லீக்” போட்டியை உருவாக்கி இருக்கிறார்கள் என்றார்.
இந்தியன் பிரிமீயர் லீக் ஐ.பி.எல் உருவாக காரணமாக இருந்தவர் லலித் மோடி. அதன் சேர்மானாக இருந்த அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக சஸ்பெண்டுசெய்யப்பட்டார். அவர் தலை மறைவாக இருக்கிறார். லலித்மோடி இல்லாமல் 4-வது ஐ.பி.எல். போட்டி நடத்தப்பட்டது.
இலங்கை பிரிமீயர் லீக் போட்டிக்கும், தனக்கும் தொடர் இருப்பதாக கூறப்படும் தகவலை லலித் மோடி மறுத்து உள்ளார். இது கிரிக்கெட் வாரியத்தின் கற்பனை என்று கூறியுள்ளார். இந்த நிலையில் இந்தி வீரர்களுக்கு அனுமதி மறுத்ததற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது.
வாரியத்தின் செயலாளர் நிஷாந்தா ரனதுங்கா கூறும்போது, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி பேரில் தான் இந்தப்போட்டி நடக்கிறது. சோமர்செட் நிறுவனத்துக்கு இந்த போட்டிக்கான வணிக உரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
