22:42
இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் "டிரா' ஆனது. இருப்பினும் 1-0 என தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி கோப்பை வென்றது.இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட், சவுத்தாம்படன் நகரில் நடந்தது.
முதல் இன்னிங்சில் இலங்கை அணி 184 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 377 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்திருந்தது.
சங்ககரா சதம்:
நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. "நைட் வாட்ச்மேன்' ஹெராத் 36 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின் இணைந்த சங்ககரா, சமரவீரா ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சங்ககரா, சர்வதேச டெஸ்ட் அரங்கில் 25 வது சதம் அடித்தார். இவர் 119 ரன்கள் எடுத்தார்.
இலங்கை அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் எடுத்திருந்த போது போட்டி "டிரா' ஆனதாக அறிவிக்கப்பட்டது. சமரவீரா (87), பிரசன்னா (6) அவுட்டாகாமல் இருந்தனர்.
இருப்பினும், இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.
