22:44
"கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதிப்பேன்,'' என, இளம் இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.சர்வதேச டென்னிஸ் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருபவர் இளம் வீரர் சோம்தேவ் தேவ்வர்மன். கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில், தங்கம் வென்று சாதித்தார். இவரால், கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.
இதுவரை ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பிரிவில் விளையாடிய இவர், நான்கு முறை முதல் சுற்றோடு வெளியேறினார். கடந்த 2009ல் நடந்த யு.எஸ்., ஓபன் தொடரில் இரண்டாவது சுற்றுவரை முன்னேறினார். ஆஸ்திரேலியன், பிரெஞ்ச், யு.எஸ்., ஓபன் ஒற்றையர் பிரிவில் விளையாடிய இவர், விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் பங்கேற்றது கிடையாது. கடந்த ஆண்டு நடந்த விம்பிள்டன் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார். இம்முறை விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் நேரடியாக முதல் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இவர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோம்தேவ் தேவ்வர்மன் கூறியதாவது: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் விளையாட நேரடியாக தகுதி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. சமீபத்தில் லண்டனில் நடந்த ஏகான் சர்வதேச டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் உலகின் "நம்பர்-33' வீரரான ஸ்பெயினின் கார்சியா-லோபசை வீழ்த்தியது உற்சாக உள்ளது. இந்த வெற்றி, விம்பிள்டன் தொடரில் சாதிப்பேன் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது. புல் மற்றும் களிமண் ஆடுகளத்தில் சாதிக்க விரும்புகிறேன். இதற்காக சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். இம்முறை விம்பிள்டன் தொடரில் முழுத்திறமையை வெளிப்படுத்தி நல்ல முன்னேற்றம் காண முயற்சிப்பேன்.
இவ்வாறு சோம்தேவ் தேவ்வர்மன் கூறினார்.
