05:54
ரெய்னா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டத்தில் இந்தியா 16 ரன்னில் வெற்றி பெற்றது. 5 ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணி முதல் 3 ஆட்டத்தில் வென்று தொடரை கைப்பற்றியது.முதல் அட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. 4-வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 103 ரன்னில் வென்று தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கிங்ஸ்டனில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
கடந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. அதை ஈடுகட்டும் வகையில் வெற்றி பெற வேண்டிய என்ற வேட்கையில் இந்திய அணி உள்ளது. இதனால் இந்திய அணி 4-வது வெற்றியை பெறுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
ரோகித்சர்மா ஒருவர் மட்டும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். யூசுப்பதான் இந்த தொடரில் எந்த ஆட்டத்திலும் முத்திரை பதிக்கவில்லை. இதனால் அவர் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார்.
முனாப்பட்டேலுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் கடந்த ஆட்டத்தில் பந்துவீச்சில் தொய்வு ஏற்பட்டது. நாளைய போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. அந்த அணியின் தொடக்க வீரர் சிம்மன்ஸ் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். இது தவிர போலார்ட், சர்வான், ரஸ்சல் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.
இரு அணிகளுமே வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் நாளை மோதுவது 101-வது போட்டியாகும். இதுவரை நடந்த 100 போட்டியில் இந்தியா 42 ஆட்டத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 55 ஆட்டத்திலும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் “டை”யில் முடிந்தது. 2 ஆட்டம் முடிவு இல்லை.
நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. தூர்தர்சன், டென் கிரிக்கெட் சேனலில் இந்த ஆட்டம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
