22:22
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.பி.,) விதியை மீறி செயல்பட்ட அப்ரிதிக்கு, ரூ. 45 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அப்ரிதி, பி.சி.பி., நிர்வாகிகளை விமர்சித்தார். இதனால் வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட இவருக்கு, வெளிநாடுகளில் விளையாட வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழையும் பி.சி.பி., திரும்பப் பெற்றது.
இதை எதிர்த்து கோர்ட்டில் அப்பீல் செய்த அப்ரிதி, பிறகு நடந்த சமாதான முயற்சிக்குப் பின், வழக்கை வாபஸ் பெற்றார். இருப்பினும், தனது செயலுக்கு மன்னிப்பு கேட்க மறுத்தார். இதையடுத்து, மூன்று நபர்கள் அடங்கிய பி.சி.பி.,யின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டியின் முன்பு, நேற்று அப்ரிதி ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இதன் முடிவில் அப்ரிதிக்கு பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 45 லட்சம் (இந்திய ரூபாயில் 23.75 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து பி.சி.பி.,யின் சட்ட ஆலோசகர் தபாஜுல் ரிஜ்வி கூறுகையில்,"" கிரிக்கெட் போர்டின் விதிகளை மீறிய அப்ரிதிக்கு அபராதம் விதிக்கப்பட்டாலும், வெளிநாடுகளில் விளையாட தடையில்லா சான்றிதழ் வழங்க, கமிட்டி பரிந்துரை செய்துள்ளது, என்றார்.
தீர்ப்பு குறித்து அப்ரிதி கூறுகையில்,"" தற்போதைய நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவது குறித்து எதுவும் நினைக்கவில்லை. ஆனால் இங்கிலாந்தின் ஹாம்சையர் அணிக்காக போட்டிகளில் பங்கேற்பேன், என்றார்.
